கணவரை பிரிந்து வாழும் முடிவை கைவிட்ட சாய்னா நேவால்


கணவரை பிரிந்து வாழும் முடிவை கைவிட்ட சாய்னா நேவால்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 3 Aug 2025 10:38 PM IST (Updated: 3 Aug 2025 10:48 PM IST)
t-max-icont-min-icon

மீண்டும் தங்களது உறவை கட்டமைக்க முயற்சிப்பதாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் கூறியுள்ளார்.

ஐதராபாத்,

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (வயது 35). இவர் பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். மேலும், ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் 1 வெள்ளி, 1 வெண்கலம் என பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். 2023ம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சாய்னா அறிவித்தார். இதனிடையே, சாய்னா நேவாலுக்கும் முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரரான பாருபள்ளி காஷ்யப் என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐதரபாத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு சாய்னா நேவால் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த இன்ஸ்டாகிராம் பதிவில், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவு செய்து பிரிவதாக அறிவித்திருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதேநேரத்தில், சாய்னா நேவாலின் பிரிவு குறித்த கருத்துக்கு பாருபள்ளி காஷ்யப் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.

இந்த சூழலில், தற்போது தனது முடிவைக் கைவிடுவதாக சாய்னா நேவால் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது கணவர் பாருபள்ளி காஷ்யப்புடன் இருக்கும் புகைப்படத்தை, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சாய்னா நேவால், 'சில நேரங்களில் தூரம் என்பது ஒருவர் நம் வாழ்வில் இருப்பதன் மதிப்பை புரிய வைக்கிறது' என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் மீண்டும் தங்களது உறவை, கட்டமைக்க முயற்சிப்பதாகவும் சாய்னா தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story