பாலியல் குற்றச்சாட்டு: சரண் சிங்குக்கு எதிராக வலுக்கும் நெருக்கடி; சாட்சியங்களை உறுதி செய்த 4 பேர்

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரத்தில் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக 4 பேர் சாட்சியங்களை உறுதி செய்து உள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டு: சரண் சிங்குக்கு எதிராக வலுக்கும் நெருக்கடி; சாட்சியங்களை உறுதி செய்த 4 பேர்
Published on

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான, பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தெரிவித்து, ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், சரண் சிங்குடன், பயிற்சியாளர்கள் சிலர் மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உதவி செயலாளர் வினோத் தோமர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில், 125 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர்களில் 4 பேர் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை உறுதி செய்து உள்ளனர்.

அவர்களில் ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர். ஒருவர் காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்றவர். இதுதவிர, சர்வதேச நடுவர் மற்றும் மாநில அளவிலான பயிற்சியாளர் என மொத்தம் 4 பேர் சரண் சிங்குக்கு எதிராக சாட்சியங்களை உறுதி செய்தனர்.

இவற்றில் புகாரளித்த சிறுமி உள்ளிட்ட 7 மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவர், பாலியல் துன்புறுத்தல் நடந்த 6 மணிநேரத்திற்கு பின்னர், அதுபற்றி தொலைபேசி வழியே பேசி தனது பயிற்சியாளரிடம் தெரிவித்து உள்ளார்.

அடுத்து, ஒலிம்பிக் போட்டி, காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்ற இரண்டு மல்யுத்த வீராங்கனைகள், விசாரணை அதிகாரிகளிடம் கூறும்போது, பாலியல் துன்புறுத்தல் பற்றிய புகார் அளித்தவர்கள், சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பின்னர், அதுபற்றி தங்களிடம் தெரிவித்தனர் என கூறியுள்ளனர்.

இதேபோன்று, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான நடுவராக உள்ள 4-வது சாட்சி, டெல்லி போலீசாரிடம் கூறும்போது, சொந்த நாட்டிலும் மற்றும் வெளிநாட்டுக்கு பயணம் செய்யும்போதும் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை எதிர்கொண்டனர் என்ற தகவலை கேள்விப்பட்டேன் என கூறியுள்ளார்.

இதனால், பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்வதற்கான நெருக்கடி மத்திய அரசுக்கு அதிகரித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com