பாலியல் குற்றச்சாட்டு விவகாரம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய கமிட்டி அமைத்த மல்யுத்த வீரர்கள்

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய இரு கமிட்டிகளை அமைத்துள்ளதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் மீதான இளம் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை கைது செய்யக்கோரி கடந்த மாதம் 23-ந்தேதியில் இருந்து டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, உங்களது (வீரர்கள்) கோரிக்கைப்படி பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டதால் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. தேவைப்பட்டால் கீழ்கோர்ட்டை அணுகலாம் என்று கூறியது. மேலும் போலீசார் போராட்ட களத்திற்கு வேறு யாரும் வராத படி தடுப்புகளை அமைத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

ஆனாலும் மல்யுத்த வீரர்கள் தங்களது போராட்டத்தில் இருந்து பின்வாங்குவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான பஜ்ரங் பூனியா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'சக வீராங்கனை வினேஷ் போகத், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார். அதன் விவரத்தை இன்று தெரிவிக்கிறோம். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய 31 பேர் கொண்ட ஒரு கமிட்டியையும், 9 பேர் கொண்ட ஒரு கமிட்டியையும் அமைத்துள்ளோம். நாளை (இன்று) மீண்டும் போராட்டத்தை தொடங்குகிறோம். அனேகமாக அடுத்து நாங்கள் ஐகோர்ட்டில் முறையிடலாம்' என்றார்.

இதற்கிடையே மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் வீரர்களுக்கு விடுத்த வேண்டுகோளில் 'போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர், வீராங்கனைகள் இதுவரை விடுத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டு விட்டது. சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்பு வழங்கி விட்டது. எனவே வீரர்கள் இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும். நேர்மையான விசாரணையில் உண்மை வெளிவரும். இதில் தேவைப்பட்டால் டெல்லி போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com