சொகுசு காரில் பாலியல் வன்கொடுமை; மைக் டைசனுக்கு எதிராக ரூ.40.82 கோடி நஷ்டஈடு கேட்டு பெண் வழக்கு

பிரபல குத்து சண்டை வீரர் மைக் டைசனுக்கு எதிராக பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்து உள்ளார்.
சொகுசு காரில் பாலியல் வன்கொடுமை; மைக் டைசனுக்கு எதிராக ரூ.40.82 கோடி நஷ்டஈடு கேட்டு பெண் வழக்கு
Published on

நியூயார்க்,

அமெரிக்காவில் 1980-ம் ஆண்டின் பிற்பகுதியில் பிரபல குத்து சண்டை வீரராக இருந்தவர் மைக் டைசன் (வயது 56). 1987-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை உலக ஹெவிவெயிட் சாம்பியனாக வலம் வந்தவர். ஆனால், இவரது தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.

இவரது மனைவியான நடிகை ராபின் கிவென்ஸ், தனது திருமண வாழ்வில் முன்பு அறியப்படாத வகையிலான வன்முறையும், அழிவும் ஏற்பட்டு இருந்தது என விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில், 32 ஆண்டுகளுக்கு முன்பு, டைசன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார் என பெண் ஒருவர் புகார் அளித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

இதுபற்றி அந்த பெண் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தேதி எதுவும் குறிப்பிடாமல், 1990-ம் ஆண்டில் நடந்தது என்று மட்டும் தெரிவித்து உள்ளார். இதே காலகட்டத்தில் அழகி போட்டியில் கலந்து கொண்ட டிசைரீ வாஷிங்டன் என்பவரும் டைசனுக்கு எதிராக பாலியல் பலாத்கார புகார் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, 1992-ம் ஆண்டு பிப்ரவரி 10-ந்தேதி டைசனுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது ரூ.40.82 கோடி நஷ்ட ஈடு கேட்டு இந்த பெண் அளித்த புகாரில், டைசனின் லிமோசின் வகை ஆடம்பர காருக்குள் அப்போது சென்றேன். உடனடியாக டைசன் என்னை நெருங்கி தொட்டார். முத்தமிட முயன்றார். நான் பல முறை வேண்டாம் என கூறினேன்.

இதனை நிறுத்தி கொள்ளுங்கள் என மறுத்தேன். ஆனால், அவர் தொடர்ந்து என்னை தாக்கினார். எனது ஆடைகளை இழுத்து, களைந்து, பலாத்கார வன்முறையில் ஈடுபட்டார் என தெரிவித்து உள்ளார்.

அவர், தனது பெயரை வெளியிட வேண்டாம் என கோரியுள்ளார். அது மனதளவில், உடல்ரீதியாக நிச்சயம் ஆபத்து ஏற்படுத்தும். தனிப்பட்ட முறையில் பாதிப்பு ஏற்படுத்த கூடும் என்றும் அச்சம் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அந்த பெண்ணின் வழக்கறிஞர் டேர்ரன் சீல்பேக் கூறும்போது, அந்த பெண் கூறி விட்டார் என்பதற்காக எல்லாம் வழக்கை எடுத்து கொள்ளவில்லை. அவரது குற்றச்சாட்டுகளை தீர விசாரித்து அதில், அதிக நம்பக தன்மை உள்ளது என தெரிந்து கொண்டேன். இதுபற்றி வேறு எதுவும் கூற முடியாது என்று அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com