ஜோகோவிச் குறித்து பழைய நினைவுகளை பகிர்ந்த ஷரபோவா

ஜோகோவிச் குறித்து தனது பழைய நினைவுகளை இன்ஸ்டாகிராமில் ஷரபோவா பகிர்ந்து கொண்டார்.
ஜோகோவிச் குறித்து பழைய நினைவுகளை பகிர்ந்த ஷரபோவா
Published on

* இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் ஆசையாக வளர்த்து வந்த புருனோ என்ற நாய் நேற்று இறந்து விட்டது. அந்த நாயின் புகைப்படத்தை கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, கடந்த 11 ஆண்டுகளாக எங்களது அன்பில் கலந்திருந்த புருனோ எங்களை விட்டு பிரிந்து விட்டது. அதன் ஆத்மா சாந்தியடையட்டும் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

* ஜெர்மனி அரசாங்கம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அங்கு தடைப்பட்டிருந்த பன்டெஸ்லிகா கிளப் கால்பந்து போட்டி இந்த மாத இறுதியில் மீண்டும் நடக்க உள்ளது. கொரோனா ஆபத்து காரணமாக ஸ்டேடியத்தில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

* உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவாவும் (ரஷியா) இன்ஸ்டாகிராம் மூலம் கலந்துரையாடினர். அப்போது ஷரபோவா, இண்டியன் வெல்சில் நடந்த கண்காட்சி கலப்பு டென்னிஸ் போட்டியில் விளையாடிய போது முதன்முதலில் ஜோகோவிச்சை பார்த்தேன். இருவரும் எதிரெதிர் ஜோடியாக மோதினோம். அந்த சமயம் அவர் எந்த கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வெல்லவில்லை. கண்காட்சி போட்டியில், தான் வென்றால் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று இரவு விருந்து அளிக்க வேண்டும் என்று என்னிடம் ரசிகர் போல் கூறினார். முதலில் தயங்கிய நான் பிறகு ஏற்றுக் கொண்டேன். அதன்படியே அவரை ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவருடன் அமர்ந்து இரவு விருந்து சாப்பிட்டேன். அப்போது அவர் பழைய காலத்து கேமிராவை எடுத்து ஓட்டல் ஊழியர் உதவியுடன் போட்டோ எடுத்தது வேடிக்கையாக இருந்தது. அது இன்னும் எனது நினைவில் இருக்கிறது என்று குறிப்பிட்டார். அதற்கு ஜோகோவிச், அது உண்மை தான். அந்த கேமிரா தொலைந்து போய் விட்டது என்று கூறினார்.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் யூ-டியூப்பில் வெளியிட்டுள்ள வீடியோவில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பதிலாக, ரசிகர்கள் அதிகம் விரும்பும் போட்டிகளான இங்கிலாந்து-ஆஸ்திரேலிய ஆஷஸ் டெஸ்ட் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி தொடர்களை நடத்தலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com