சின்கியுபீல்ட் கோப்பை செஸ்: அமெரிக்க வீரர் வெஸ்லி சாம்பியன்

image courtesy:twitter/@FIDE_chess
பிரக்ஞானந்தா 2-வது இடத்தை பிடித்தார்.
செயின்ட் லூயிஸ்,
கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமான சின்கியுபீல்ட் செஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 9-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 32-வது நகர்த்தலில் அமெரிக்காவின் லெவொன் அரோனியனுடன் ‘டிரா’ செய்தார். இதே போல் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ்- பாபியானோ கருனா (அமெரிக்கா) இடையிலான ஆட்டம் 44-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. மேக்சிம் வச்சியர் லக்ரேவ் (பிரான்ஸ்)- டுடா ஜன் கிர்சிஸ்டோப் (போலந்து), சாம் செவியன் (அமெரிக்கா)- அலிரெஜா பிரோவ்ஜா (பிரான்ஸ்) இடையிலான ஆட்டமும் டிரா ஆனது. மற்றொரு ஆட்டத்தில் வெஸ்லி சோ (அமெரிக்கா), உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை சாய்த்தார்.
9-வது சுற்று முடிவில் பாபியானோ கருனா, வெஸ்லி சோ, பிரக்ஞானந்தா தலா 5½ புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர். குகேஷ் 4 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க ரேபிட் முறையில் டைபிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. முதல் டைபிரேக்கரில் பிரக்ஞானந்தா, பாபியானோ கருனாவை 33-வது நகர்த்தலில் தோற்கடித்தார். அடுத்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா 38-வது நகர்த்தலில் வெஸ்லி சோவிடம் பணிந்தார். வெஸ்லி சோ- பாபியானோ கருனா இடையிலான ஆட்டம் டிரா ஆனது. முடிவில் வெஸ்லி சோ 1½ புள்ளிகள் எடுத்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். பிரக்ஞானந்தா 1 புள்ளியுடன் 2-வது இடத்தை பிடித்தார். அத்துடன் மேக்சிம் வச்சியர், பாபியானோ கருனா, லெவொன் அரோனியன், பிரக்ஞானந்தா ஆகியோர் கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
பட்டம் வென்ற வெஸ்லி சோவுக்கு ரூ.87½ லட்சமும், 2-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு ரூ.57 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.






