சின்கியுபீல்ட் கோப்பை செஸ்: 4-வது சுற்றில் குகேஷ் டிரா


சின்கியுபீல்ட் கோப்பை செஸ்: 4-வது சுற்றில் குகேஷ் டிரா
x

டி குகேஷ் (image courtesy: Narendra Modi twitter via ANI

சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது.

செயின்ட் லூயிஸ்,

கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமான சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த குகேஷ்- மேக்சிம் வச்சியர் லக்ரேவ் (பிரான்ஸ்) மோதினர்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய குகேஷ் 56-வது நகர்த்தலில் டிரா கண்டார். இதே போல் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா- சாம் செவியன் (அமெரிக்கா) இடையிலான ஆட்டம் 29-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.

மற்றொரு ஆட்டத்தில் கருப்புநிற காய்களுடன் ஆடிய அமெரிக்க வீரர் பாபியானோ கருனா, நோடிர்பெக் அப்துசத்தோரோவை (உஸ்பெகிஸ்தான்) வீழ்த்தினார். அலிரெஜா பிரோவ்ஜா (பிரான்ஸ்)- வெஸ்லி சோ (அமெரிக்கா), ஜன் கிர்சிஸ்போப் டுடா (போலந்து)- லெவொன் அரோனியன் (அமெரிக்கா) இடையிலான ஆட்டங்கள் ‘டிரா’ ஆனது.

9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 4-வது சுற்று முடிவில் பாபியானோ கருனா 3 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லெவொன் அரோனியன், பிரக்ஞானந்தா தலா 2½ புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

1 More update

Next Story