‘நான் ஓரினச் சேர்க்கையாளர்’ - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு

‘நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்’ என்று தடகள வீராங்கனை டுட்டீ சந்த் பகிரங்கமாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
‘நான் ஓரினச் சேர்க்கையாளர்’ - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11.24 வினாடிகளில் இலக்கை கடந்து தேசிய சாதனையாளராக வலம் வருகிறார். கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டம் இரண்டிலும் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். ஒடிசாவைச் சேர்ந்த 23 வயதான டுட்டீ சந்த், சில ஆண்டுகளுக்கு முன்பு பாலின பிரச்சினையில் சிக்கினார். அதாவது அவரிடம் ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக கூறி தடகளத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு விளையாட்டுக்கான கோர்ட்டில் அப்பீல் செய்து சாதகமான தீர்ப்பை பெற்றார்.

இந்த நிலையில் அவர், தான் ஒரு ஓரினசேர்க்கையாளர் என்ற தகவலை வெளியிட்டு இப்போது புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். ஒரே பாலினத்தை விரும்புகிறவர்கள் என்று ஒரு சில விளையாட்டு பிரபலங்களே தைரியமாக வெளிஉலகுக்கு சொல்லி இருக்கிறார்கள். அந்த பட்டியலில் டுட்டீ சந்தும் இணைந்துள்ளார்.

இது குறித்து டுட்டீ சந்த் நேற்று கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளாக எனது கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறேன். அந்த பெண் புவனேசுவரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் எனக்கு சொந்தக்காரர் தான். அவரது வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் நிறைய நேரத்தை செலவிடுவேன். அவர் தான் எனது உயிர் மூச்சு. எதிர்காலத்தில் அவருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புகிறேன்.

எனது வீட்டை மூத்த சகோதரி கவனித்து வருகிறார். வீட்டில் அவரது ஆதிக்கம் தான் எப்போதும் இருக்கும். தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக சகோதரனின் மனைவியை எனது அக்கா வீட்டை விட்டே விரட்டி விட்டு விட்டார். இப்போது அவர் என்னையும் குடும்பத்தில் சேர்க்கமாட்டேன், இங்கிருந்து போய் விடு என்று மிரட்டுகிறார். ஆனால் எனக்கு 18 வயது தாண்டி விட்டது. சட்டப்படி எனது வாழ்க்கையை தீர்மானிக்க எனக்கு முழு உரிமை உண்டு. அதனால் அந்த பெண்ணுடன் வாழப்போவதை வெளிப்படையாக சொல்கிறேன்.

எனது சகோதரி, நான் தேர்ந்தெடுத்துள்ள வாழ்க்கை துணைக்கு எனது சொத்து மீது தான் ஆசை இருப்பதாக சொல்கிறார். அது மட்டுமின்றி இந்த உறவு நீடிக்கும் பட்சத்தில் என்னை ஜெயிலுக்கு அனுப்பி விடுவேன் என்றும் மிரட்டுகிறார். என்னை பொறுத்தவரை இறுதியாக அவருடன் இருக்கவே விரும்புகிறேன். தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதே எனது லட்சியம். அதற்காக கடின பயிற்சி மேற்கொண்டுள்ளேன். இவ்வாறு டுட்டீ சந்த் கூறினார்.

தனது பார்ட்னரின் ஒப்புதலுடன் இந்த விஷயத்தை வெளிப்படுத்திய டுட்டீ சந்த் அவரது பெயரை வெளியிட மறுத்து விட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com