முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்
Published on

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 24-ந்தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது.

போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. பாராஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமதி, டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல் ஆகியோர் தொடக்க விழாவில் ஜோதியை ஏந்தி செல்கின்றனர். துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைக்கிறார்.

தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், கபடி, சிலம்பம், பளுதூக்குதல், கால்பந்து, ஆக்கி, குத்துச்சண்ட, நீச்சல், கிரிக்கெட், கூடைப்பந்து, கைப்பந்து, கேரம், வாள்வீச்சு, செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ் உள்பட 36 வகையான விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. இந்த முறை காட்சி போட்டியாக இ-ஸ்போர்ட்ஸ் இடம் பெறுகிறது.

போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அணியினருடன் வரும் அலுவலர்களுக்கு டி-ஷர்ட் வழங்கப்படுகிறது. அத்துடன் அவர்களின் உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து செலவுகள் அவர்களின் சொந்த மாவட்டத்திலிருந்து கவனித்துக் கொள்ளப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் தனிநபர் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இந்த முறை 4-வது இடத்தை பிடிப்பவருக்கு 3-வது இடத்திற்குரிய அதே பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

குழு போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே தலா ரூ.75 ஆயிரம், ரூ.50, ஆயிரம், ரூ.25 ஆயிரம் வீதம் வழங்கப்படும். போட்டிகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com