

புகாரெஸ்ட்,
கிராண்ட் செஸ் டூரின் ஒரு அங்கமான சூப்பர் செஸ் கிளாசிக் போட்டி ருமேனியாவில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 10 வீரர்கள் பங்கேற்று மோதி வருகின்றனர். இதன் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை சந்தித்தார்.
இந்த ஆட்டம் 64-வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது. முந்தைய ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வென்று உலகக்போட்டிக்கு தகுதி பெற்றவரான ஜவோகிர் சிந் தாரோவை (உஸ்பெகிஸ்தான்) வீழ்த்தி இருந்தார். மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரி 72-வது காய் நகர்த்தலில் பிரான்சின் அலி ரேசா பிரோஜாவை தோற்கடித்தார். மற்ற இரு ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
3-வது சுற்று முடிவில் மேக்சிம் லாக்ரேவ் (பிரான்ஸ்), அனிஷ் கிரி (நெதர்லாந்து), வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), ஜோர்டான் வான் பாரஸ்ட் (நெதர்லாந்து), பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றனர்.