

லக்னோ,
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் துஷர் சுவீர் 21-14, 21-12 என்ற நேர்செட்டில் சக நாட்டவரான ஷஷ்வாத் தலாலை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். இந்திய வீரர் பிரனாய் ஷெட்டிகர் 11-21, 18-21 என்ற நேர்செட் டில் மலேசியாவின் லீ ஜீ ஜியாவிடம் பணிந்தார்.
பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சரிவில் இருந்து மீண்டு வந்து 18-21, 21-18, 21-18 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் முதிரா அயு புஸ்பிரதாசாரியை வீழ்த்தி கால்இறுதிக் குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 21-14, 21-18 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் இஷிகா ஜெய்ஸ்வாலை தோற்கடித்தார். இதே போல் இந்தியாவின் தஸ்னிம் மிர் 21-19, 21-15 என்ற நேர்செட்டில் கிறிஸ்டி கில்முரை (ஸ்காட்லாந்து) வெளியேற்றினார். மற்றொரு ஆட்டத்தில் அன்மோல் கார்ப் 21-16, 21-15 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை அஷ்மிதா சாலிஹாவை சாய்த்தார். மற்ற இந்திய வீராங்கனைகள் இஷாராணி பரூவா. தன்யா ஹேமந்த், ரக்ஷிதா தங்களது ஆட்டங்களில் தோல்வியை தழுவினர்.
பெண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி ஜோடி 21-9, 21-8 என்ற நேர்செட்டில் சக நாட்டவர்களான ஸ்ரேயா-பிரனவி இணையை தோற்கடித்து கால்இறுதியை எட்டியது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹரிகரன் அம்சகருணன் எம்.ஆர்.அர்ஜூன் கூட்டணி 21-12, 22-20 என்ற நேர்செட்டில் பிரான்சின் மேல் கேடோன்-லூகாஸ் ஜோடியை வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றது.