பார்முலா4 கார்பந்தயம் இன்று தொடக்கம்

பார்முலா4 கார்பந்தயத்தின் முதல் சுற்று இருங்காட்டுகோட்டையில் இன்றும், நாளையும் நடக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில், ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான பார்முலா-4 பந்தயம், சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டது. இந்த போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, சாலைகள் மேம்படுத்தப்பட்டன.

ஆனால், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பார்முலா 4 கார்பந்தயம் ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில் சென்னையில் இப்போட்டியை நடத்த தடை கோரிய வழக்கில், தீவுத்திடல் பகுதியில் இப்போட்டியை நடத்த தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு, இருங்காட்டுக்கோட்டையில் போட்டியை நடத்திக்கொள்ள பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.

இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பார்முலா4 இந்திய கார்பந்தய சாம்பியன்ஷிப் போட்டி 5 ரவுண்டுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ரவுண்டிலும் 3 பந்தயங்கள் இடம் பெறும். ஒவ்வொரு பந்தயத்திலும் வெற்றி தோல்விக்கு ஏற்ப புள்ளி வழங்கப்படும். 5 சுற்று முடிவில் யார் அதிக புள்ளிகளை குவித்து இருக்கிறாரோ அவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்வார்.

இந்நிலையில் இதன் முதலாவது சுற்று சென்னையை அடுத்த இருங்காட்டுகோட்டையில் உள்ள கார்பந்தய மைதானத்தில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் நடைபெறுகிறது. இதில் 8 அணிகளைச் சேர்ந்த 16 வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

முதல் நாளில் பயிற்சி, இரண்டு தகுதி சுற்றை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு பிரதான பந்தயம் நடைபெறுகிறது. பந்தய ஓடுதளம் 3.717 கிலோமீட்டர் கொண்டதாகும். தகுதி சுற்றில் முதலிடம் பிடிப்பவரின் கார் முதல் வரிசையில் இருந்து சீறிப்பாயும். பந்தய நேரம் 25 நிமிடங்கள் ஆகும். அதற்குள் எத்தனை தடவை முடியுமோ மைதானத்தை அதிவேகமாக சுற்றி வர வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடியும் போது பெரும்பாலானவர்கள் மைதானத்தில் ஏதாவது ஒரு பகுதியில் இருப்பார்கள். எனவே கூடுதலாக ஒரு முறை சுற்றி வர வேண்டும். அதன் பிறகு குறிப்பிட்ட நேரத்தில் அதிக தூரம் கடந்த வீரர் யார் என்பது கணக்கிடப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். 2-வது நாளில் இரண்டு பந்தயம் நடத்தப்படுகிறது.

இந்திய வீரர்கள் அசத்துவார்களா?

முதலாவது மற்றும் 3-வது பந்தயத்தில் முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே 25, 18, 15, 12, 10, 8, 6, 4, 2, 1 வீதம் புள்ளி வழங்கப்படும். அத்துடன் 3.717 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஓடுதளத்தை அதிவேகமாக நிறைவு செய்யும் வீரருக்கு ஒரு புள்ளியும், தகுதி சுற்றில் முதலிடம் பிடிப்பவருக்கு 2 புள்ளியும் கொடுக்கப்படும். 2-வது ரேசுக்கு 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 வீதம் புள்ளி அளிக்கப்படும். இதில் பல வெளிநாட்டு வீரர்கள் களம் கண்டாலும், இந்தியாவின் இளம் புயல்கள் ஜேடன் ரேமன் பரியாட், அபய் மோகன், ருஹான் ஆல்வா உள்ளிட்டோர் அசத்துவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த கார்பந்தய கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியன் கார்பந்தய லீக் போட்டியும் (ஐ.ஆர்.எல்.) நடத்தப்படுகிறது. இதில் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியிலும் 3 வீரர், ஒரு வீராங்கனை இடம் பெற்று இருப்பார்கள். அணியில் இருவர் களம் இறங்குவார்கள். இதற்கான முதல் பந்தயம் இன்று மாலை 4 மணிக்கு அதே இடத்தில் நடக்கிறது. இதற்கான நேரமும் 25 நிமிடங்கள் தான்.

பார்முலா4 கார்பந்தயத்தின் 2-வது ரவுண்ட் போட்டி சென்னையில் வருகிற 31 மற்றும் 1-ந்தேதி நடைபெறுகிறது. 'ஸ்ட்ரீட் சர்க்யூட்' என்ற பெயரிலான இந்த பந்தயத்திற்காக சென்னை தீவுத் திடலை சுற்றி 3.5 கிலோமீட்டர் சாலை போட்டிக்குரிய ஓடுதளமாக மாற்றப்பட்டு வருகிறது. இதில் அமைந்துள்ள 19 வளைவுகள் வீரர்களுக்கு கடும் சவாலாக இருக்கும்.

தெற்காசியாவிலேயே முதன் முறையாக இரவு நேர கார் பந்தயம் என்பதால் இந்த போட்டிக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பலர் கலந்து கொள்வதால் இந்த போட்டியை காண ஏராளமான மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com