மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது
Published on

பாரீஸ்,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சமீபத்தில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. இந்தியாவுக்கு 6 பதக்கம் கிடைத்தது.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பாரீசில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை அரங்கேறும் இந்த போட்டியில் 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். உடல் குறைபாட்டுக்கு ஏற்ப விளையாட்டுகள் வகைப்படுத்தப்பட்டு நடத்தப்படுகிறது. இதில் 22 விளையாட்டுகளில் 549 பந்தயங்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி களம் காணுகிறது. பாராஒலிம்பிக்கில் இந்தியாவின் அதிகபட்ச எண்ணிக்கை இதுதான். இளமையும், அனுபவமும் வாய்ந்த அவர்கள் வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், சைக்கிளிங், ஜூடோ, வலுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ, துடுப்பு படகு, கனோயிங் (சிறிய துடுப்பு படகு) ஆகிய 12 விளையாட்டுகளில் திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் இருந்து மாரியப்பன் (உயரம் தாண்டுதல்), துளசிமதி, மனிஷா ராமதாஸ், நித்ய ஸ்ரீசிவன், சிவராஜன் சோலைமலை (4 பேரும் பேட்மிண்டன்), கஸ்தூரி ராஜாமணி (வலுதூக்குதல்) ஆகிய 6 பேர் இந்திய அணியில் அங்கம் வகிக்கிறார்கள்.

இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணிக்கு தொடங்கும் தொடக்க விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனம், சாகசங்கள், வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு இடம் பெறுகின்றன. தொடக்க விழாவை 65 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க உள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடைபெறும். நாளை முதல் போட்டிகள் நடைபெறும். போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com