

நியூயார்க்,
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஜூபிடர் நகரில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் பிரபல ஃகோல்ப் வீரர் டைகர் உட்ஸ் மது அருந்திவிட்டு காரை ஓட்டி சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, அந்நகர போலீசார் அவரை கைது செய்தனர். சிறிது நேரத்தில் சட்டரீதியான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாக அவர் எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தார்.
இதனையடுத்து, போலீசார் அவரை விடுவித்தனர். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடன் பேச மறுத்து விட்டார். ஆனால், சிறிது நேரத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தான் மது அருந்தவில்லை எனவும் பயன்படுத்திய மருந்துகளால் ஏற்பட்ட திடீர் விளைவுகளே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும், மருந்துகளின் கலவை இந்த அளவு வீரியத்தை ஏற்படுத்தும் என நான் எதிர்பார்க்கவில்லை. எனினும் நான் மனப்பூர்வமாக எனது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
41 வயதான டைகர் உட்ஸ்க்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை சமீபத்தில் நடந்தது. 14 முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்த டைகர் உட்ஸ், காயம் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து முக்கிய ஃகோல்ப் தொடர்கள் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.