‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சாதிப்பேன்’ - இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் நம்பிக்கை

அடுத்த ஆண்டு நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று சாதிப்பேன் என்று இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் நம்பிக்கை தெரிவித்தார்.
‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சாதிப்பேன்’ - இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் நம்பிக்கை
Published on

சென்னை,

டேபிள் டென்னிஸ் போட்டியில் 9 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தவரும், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் உள்பட 9 பதக்கங்கள் வென்றவரும், உலக தரவரிசையில் 31-வது இடத்தில் இருப்பவருமான சென்னையை சேர்ந்த 37 வயதான சரத்கமல் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கிறார். ஊரடங்கு மற்றும் அடுத்த ஆண்டுக்கு (2021) தள்ளிவைக்கப்பட்டு இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி குறித்து சரத்கமல் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

கடந்த மார்ச் மாதம் நடந்த ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பட்டம் வென்று நாடு திரும்பிய பிறகு ஊரடங்கு காரணமாக குடும்பத்தினருடன் முழுமையாக நேரத்தை செலவிட்டு வருகிறேன். யோகா, தியானம் மற்றும் உடல் தகுதி பயிற்சிகளை தினசரி மேற்கொண்டு வருகிறேன். வீட்டு மொட்டை மாடியில் எனது குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தும், அவர்களுடன் விளையாடியும் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த வாரத்தில் இருந்து எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று அப்பா (பயிற்சியாளர் சீனிவாசராவ்) மற்றும் தம்பியுடன் (ரஜத் கமல்) இணைந்து டேபிள் டென்னிஸ் ஆட்டத்தை மீண்டும் விளையாட தொடங்கி இருக்கிறேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அனுமதி அளித்ததும் நேரு ஸ்டேடியத்தில் உள்ள பயிற்சி மையத்துக்கு சென்று பயிற்சியாளரும் எனது சித்தப்பாவுமான முரளிதரராவுடன் சேர்ந்து தீவிர பயிற்சியை தொடங்க காத்து இருக்கிறேன். ஜூலை மாதம் கடைசி வரை எந்தவித போட்டியும் இல்லை என்பதால் அவசரப்பட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ஊரடங்கு கட்டுப்பாடுகள் முதலில் கடினமாக தான் இருந்தது. தற்போது அது பழகிப்போய்விட்டது. 2015-ம் ஆண்டில் வலது காலில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்த போது இதேபோல் தான் நீண்ட நாட்கள் பயிற்சியில் ஈடுபடமுடியாமல் வீட்டில் தவித்தேன். அந்த கடினமான கட்டத்தில் இருந்து வலுவாக மீண்டு வந்தேன். அதுபோல் இந்த சவாலையும் கடக்க முடியும் என்று நம்புகிறேன்.

2018-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இரண்டு பதக்கம் வென்ற நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் கடந்த ஆண்டு முதலே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியை தொடங்கி விட்டேன். கடந்த மார்ச் மாதம் வரை நான் நல்ல பார்மில் இருந்தேன். ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவதில் பாதி கிணற்றை தாண்டி விட்டேன் எனலாம். ஆனால் கொரோனா காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு (2021 ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை) தள்ளிப்போனது வருத்தம் தான். இதனால் அடுத்து சர்வதேச போட்டி அட்டவணை எப்படி அமைகிறது என்பதை பார்த்து விட்டு அதற்கு தகுந்தபடி திட்டமிட்டு மீண்டும் புதிதாக ஆரம்பத்தில் இருந்து பயிற்சியை தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச போட்டிகள் வருகிற ஆகஸ்டு மாதம் தொடங்கி விடும் என்று சொல்கிறார்கள். ஆனால் நவம்பர் மாதம் ஆகி விடும் என்று நினைக்கிறேன். கொரோனாவுக்கு பிறகு விதிமுறையில் மாற்றம் செய்யப்படலாம். இரட்டையர் ஆட்டங்கள் இருக்குமா? என்பது தெரியவில்லை. நிலையற்ற தன்மை நிலவுவதால் அடுத்து நமது ஆட்டம் எப்படி அமையும் என்று சொல்ல முடியாது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகள் தள்ளிப்போடப்பட்டு இருக் கின்றன. சக வீரர் சத்யன், வீராங்கனை மனிகா பத்ரா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் என்னால் பதக்கம் வென்று சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.

கொரோனா தாக்கம் தணிந்த பிறகு ரசிகர்கள் இன்றி பூட்டிய ஸ்டேடியத்தில் போட்டியை தொடங்கினால் எங்களை பொறுத்தமட்டில் பிரச்சினை எதுவும் இல்லை. அதேநேரத்தில் வீரர்கள் பயணம், ஓட்டலில் தங்குதல், போட்டி நடைபெறும் இடத்தில் மொத்தமாக கூடுதல் ஆகியவற்றில் பாதுகாப்பு பிரச்சினை எழத்தான் செய்யும். அதற்கு தீர்வு காண வேண்டியது அவசியமானதாகும்.

இவ்வாறு சரத்கமல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com