

புதுடெல்லி,
இந்தியாவின் மிகச்சிறந்த துப்பாக்கி சுடுதல் வீரரும், சர்வதேச அளவிலான பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா(வயது 49), ஜெர்மனியின் மியூனிக்கில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பைப் போட்டியில் இருந்து திரும்பும்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
தொடர்ந்து டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜஸ்பால் ராணா, கடந்த 12-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜஸ்பால் ராணா, காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் 15 பதக்கங்களை வென்று இருக்கிறார். மனு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி போன்ற திறமையான வீரர்களை உருவாக்கியுள்ளார்.
மேலும், இந்திய துப்பாக்கி சுடுதல் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றிய இவருக்கு, 1994-ல் அர்ஜுனா விருதும், 1997-ல் பத்மஸ்ரீ விருதும், 2020-ல் துரோணாச்சார்யா விருதும் வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. ஜஸ்பால் ராணாவின் மறைவு இந்திய விளையாட்டுத் துறைக்கு ஒரு பேரிழப்பு என பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜஸ்பால் ராணாவின் குடும்பத்தில் மற்றொரு சோகமாக, அவரது தாயார் ஷியாமா தேவி நேற்று(28-ந்தேதி) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஏற்கனவே பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த சியாமா தேவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஜூன் 28-ந்தேதி ஜஸ்பால் ராணாவின் பிறந்தநாள் ஆகும். அவர் உயிருடன் இருந்திருந்தால் நேற்றைய தினம் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடியிருப்பார். இந்நிலையில், அவர் கடந்த 12-ந்தேதி உயிரிழந்த நிலையில், தனது மகனின் பிரிவால் வாடிய சியாமா தேவி, அவரது பிறந்தநாளன்று உலகை விட்டுப் பிரிந்துள்ளார்.
அடுத்தடுத்த இழப்புகளால் ஜஸ்பால் ராணாவின் தந்தை நாராயண் சிங் ராணா, மனைவி ரீனா, மகள், மகன் மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சியாமா தேவியின் மறைவுக்கு உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.