மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கொலை மிரட்டல் - வினேஷ் போகத் குற்றச்சாட்டு

பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூறியுள்ளார்.
மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கொலை மிரட்டல் - வினேஷ் போகத் குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத்தரும் விளையாட்டுகளில் ஒன்றாக மல்யுத்தம் விளங்குகிறது. இதுவரை ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியா 7 பதக்கங்களை வென்று இருக்கிறது. இதனால் இந்தியாவில் இப்போது கவனிக்கத்தக்க விளையாட்டுகளில் ஒன்றாக மல்யுத்தம் இருக்கிறது.

இந்த நிலையில் நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் 30 பேர் நேற்று திடீரென போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத், சரிதா மோர், சங்கீதா போகத், அன்ஷூமாலிக், சத்யவார்த் மாலிக், ஜிதேந்தர் கின்ஹா, அமித் தன்கர், சுமித் மாலிக் ஆகியோரும் அடங்குவர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக 2011-ம் ஆண்டில் இருந்து 66 வயதான பிரிஜ் பூஷன் ஷரண் சிங் இருந்து வருகிறார். இவர் பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யும் ஆவார். நீண்ட காலம் அந்த பொறுப்பில் இருக்கும் அவர் சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்கிறார், மல்யுத்த வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொள்கிறார். அவரை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே மல்யுத்த வீரர்களின் கோரிக்கையாகும்.

இது குறித்து நட்சத்திர வீராங்கனை 28 வயதான வினேஷ் போகத் நிருபர்களிடம் கண்ணீர் மல்க பேசுகையில், 'மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனின் பாலியல் சீண்டல்களுக்கு குறைந்தது 10-12 மல்யுத்த வீராங்கனைகள் உள்ளாகி இருக்கிறார்கள். தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை அவர்களே என்னிடம் தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களின் பெயரை இப்போது வெளியிடமாட்டேன்.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் போது பாதிக்கப்பட்ட வீராங்கனைகளின் விவரத்தை நிச்சயம் சொல்வேன். நான் இது போன்ற பாலியல் தொந்தரவு எதையும் சந்தித்ததில்லை. ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடிய போது சில விஷயங்களை அவரது கவனத்துக்கு கொண்டு சென்றதால் ஆத்திரத்தில் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமானவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com