எனது வாழ்க்கை கதையில் அமீர்கான் நடிக்க ஆசைப்படுகிறேன்...! - விஸ்வநாதன் ஆனந்த்

5 முறை உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் அமீர் கான் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
எனது வாழ்க்கை கதையில் அமீர்கான் நடிக்க ஆசைப்படுகிறேன்...! - விஸ்வநாதன் ஆனந்த்
Published on

கொல்கத்தா,

சர்வதேச தரத்திலான செஸ் தொடர் இன்று தொடங்கி நடைபெற உள்ளது. இத்தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக கொல்கத்தா சென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த் இன்று அளித்துள்ள பேட்டியில்,

நான் என்னுடைய வாழ்க்கை குறித்து திரைப்படமாக எடுக்க அனுமதி அளித்துள்ளேன். என் வாழ்க்கை கதையை முழுவதுமாக தயாரிப்பாளரிடம் கூறிவிட்டேன். திரைக்கதை எழுதும் பணி விரைவில் தொடங்கி நடைபெற உள்ளது. கொரோனா காரணமாக வேலை தடைபட்டுள்ளது. படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று இப்போது கூற இயலாது. இத்திரைப்படம் குறித்து வேறு தகவல்கள் எதையும் கூற முடியாது. இன்னும் சில தினங்களில் அனைத்து விஷயங்களையும் தெரிவிக்கிறோம்.

என்னுடைய வாழ்க்கை திரைப்படமாக வரும் போது,செஸ் விளையாட்டு வீரர்கள் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்கள் எனும் கூற்று பொய்யாகும் என்று கூறியுள்ளார்.

எனினும், தனு வெட்ஸ் மனு திரைப்படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இவருடைய வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க உள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது.

எந்த நடிகர் உங்கள் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் கூறிய பதில் வருமாறு, அமீர் கான் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று ஆசைப்படுகிறேன். அவருக்கும் எனக்கும் நிறைய விஷயங்கள் பொதுவாக உள்ளன. ஆனால், யார் நடிப்பார்கள் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது.

அரசியல் குறித்த கேள்வியை நிறைவு செய்யும் முன்பே, அரசியலுக்கு வரும் திட்டம் எனக்கு இல்லை. செஸ் விளையாட்டை தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே என் விருப்பம் என்று கூறி முடித்தார்.

ஓய்வு குறித்த கேள்விக்கு பதில் கூறுகையில், இப்போதைக்கு ஓய்வு பெறும் முடிவு இல்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் மூலமாக பல்வேறு செஸ் தொடர்களில் பங்கேற்றிருந்தேன். இன்னும் நிறைய போட்டிகள் வர உள்ளன. நவம்பர் 24ம் தேதியிலிருந்து தொடங்கவிருக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நானும் ஒரு வர்ணனையாளராக இருக்கிறேன் என்று கூறி பேட்டியை நிறைவு செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com