சஞ்சய் சிங் இல்லாத இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நாங்கள் ஏற்கிறோம் - சாக்ஷி மாலிக்

மல்யுத்த நிர்வாக பணியை தற்போது பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையிலான இடைக்கால கமிட்டி கவனித்து வருகிறது.
image courtesy; PTI
image courtesy; PTI
Published on

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டி முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், பிரிஜ் பூஷணை கைது செய்ய கோரி கோரிக்கை முன்வைத்தனர். இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கினார்.

இதற்கிடையே, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்களை போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா ஆகியோர் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரை சந்தித்து வலியுறுத்தினர். அதேவேளை, பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவரது விசுவாசியான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால் போராட்டத்தை முன்னின்று நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தார்.

இதையடுத்து, இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. மல்யுத்த நிர்வாக பணியை தற்போது பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையிலான இடைக்கால கமிட்டி கவனித்து வருகிறது. இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது,

பிரிஜ் பூஷன் சிங்கின் ஆதரவாளரான சஞ்சய் சிங் இல்லாத இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நாங்கள் ஏற்கிறோம். மற்ற உறுப்பினர்கள் இருப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்னால் வேண்டுகோள் மட்டுமே வைக்க முடியும். சஞ்சய் சிங் மீண்டும் மல்யுத்த சம்மேளனத்திற்கு வரமாட்டார் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவாதம் அளித்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com