விளையாட்டு வீரர்களும் மனிதர்கள் தான், ரோபோக்கள் அல்ல- பிரபல வீராங்கனை சாடல்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார்.
Image Courtesy: PTI  
Image Courtesy: PTI  
Published on

சென்னை,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் பெல்கிரேடு நகரில் நடந்தன. இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட வினேஷ் போகத் சமீபத்தில் வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார்.

இருப்பினும் இந்த தொடரின் முதல் சுற்றில் மகளிருக்கான ஃப்ரீஸ்டைல் 53 கிலோ எடைப் பிரிவில் மங்கோலியாவின் குலான் பத்குயாக்கை வினேஷ் போகத் எதிர்கொண்டார். இதில் வினேஷ் போகத் 0-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். அப்போது அவர் மீது சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது அந்த விமர்சனங்களுக்கு வினேஷ் போகத் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

"விளையாட்டு வீரர்களும் மனிதர்கள்தான். ஒவ்வொரு முறை போட்டி அறிவிக்கப்படும்போதும் நாங்கள் ஒரு ரோபோட்டைப் போல இயங்க முடியாது. வீட்டில் அமர்ந்தபடி விளையாட்டில் கைதேர்ந்தவர்களைப் போல விளையாட்டு வீரர்களை விமர்சிக்கும் கலாசாரம் இந்தியாவில் மட்டும்தான் உள்ளதா, அல்லது உலகம் முழுவதும் இப்படித்தான் இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஒவ்வொரு தனி மனிதரும் தங்கள் துறையில் பல போராட்டங்களையும் தோல்விகளையும் சந்திக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் எங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால் அவர்களை யாரும் இந்த அளவிற்கு விமர்சனம் செய்வதில்லை.

விளையாட்டிலோ அல்லது எந்தவொரு விஷயத்திலோ கருத்து தெரிவிப்பது என்பது மிகவும் எளிமையான ஒன்று. ஒரு நாள் வீட்டிலிருந்தபடி விமர்சனம் செய்பவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

ஆனால் விளையாட்டையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு அப்படியில்லை. அது அவர்களின் மனநிலை மற்றும் உழைப்பில் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com