ஹிட்லரை மிரள வைத்த தடகள வீரர்

தடகள உலகில் சிறந்த வீரர்களில் ஒருவராக வலம் வந்தவர்,அமெரிக்காவின் ஜசி ஓவன்ஸ். ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கருப்பு இனத்தவர்.
ஹிட்லரை மிரள வைத்த தடகள வீரர்
Published on

1936-ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் அவர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் நீளம்தாண்டுதல் என்று 4 தங்கப்பதக்கம் வென்று அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். தடகளத்தில் ஒரு ஒலிம்பிக்கில் 4 தங்கம் வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையையும் பெற்றார்.

சர்வாதிகாரியும், ஜெர்மனி அதிபருமான அடோல்ப் ஹிட்லர் யூதர்களும், கருப்பினத்தவரும் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார். ஆனால் விளையாட்டில் இனவெறி சாயம் பூசக்கூடாது என்று பல நாடுகள் போர்க்கொடி தூக்க, அரைகுறை மனதுடன் பின்வாங்கினார். ஆனாலும் அவரது எண்ணமும், செயலும் மாறவில்லை.

தங்கப்பதக்கம் வென்ற ஜசி ஓவன்சுடன் ஹிட்லர் கை குலுக்க மறுத்துவிட்டார். ஆனால் முந்தைய நாள் ஜெர்மனி வெற்றியாளர்களுடன் உற்சாகமாக கைகுலுக்கிய அவர் மறுநாள் திட்டமிட்டே ஸ்டேடியத்தை விட்டு முன்கூட்டியே சென்று விட்டதாக குற்றச்சாட்டு உண்டு. ஆரிய மக்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது ஹிட்லரின் ஆசை. அவரது ஆசையை தூள்தூளாக்கிய ஜெசி ஓவன்ஸ், அந்த ஒலிம்பிக்கின் சரித்திர ஹீரோவாக ஜொலித்தார். இருப்பினும் 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி கண்ட போது, ஹிட்லர் தான் அமர்ந்திருந்த பகுதியில் இருந்து கையசைத்ததாக ஜெசி ஓவன்ஸ் ஒருமுறை சொல்லியிருக்கிறார்.

இந்த ஒலிம்பிக்கில் ஜெசி ஓவன்சுக்கு மறக்க முடியாத இன்னெரு நிகழ்வும் உண்டு. நீளம் தாண்டுதலில் தொடக்கத்தில் வெகுவாக தடுமாறிய ஓவன்ஸ் ஜெர்மனி வீரர் லுஸ் லாங்கின் அறிவுரையின்படி முன்னேற்றம் கண்டு 8.06 மீட்டர் நீளம் தாண்டி முதலிடம் பிடித்தார். லுஸ் லாங்க் 7.87 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றார். இதன் மூலம் ஜெசி ஓவன்ஸ்- லுஸ் லாங் இடையே நட்புறவு மலர்ந்தது. அவருடன் இணைந்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார். ஓய்வறைக்கும் நேரில் சென்று வாழ்த்தினார்.

அவருடனான நட்பை ஜெசி ஓவன்ஸ் இவ்வாறு விவரித்தார். ஹிட்லர் முன்னிலையில் என்னுடன் நட்பு வைக்க லாங்குக்கு நிறையவே துணிச்சல். நாங்கள் வென்ற பதக்கங்கள், கோப்பைகளை அழிக்கலாம். 24 கேரட் போன்ற எங்களது நட்பை யாராலும் களங்கப்படுத்த முடியாது என்றார். ஜெர்மனி ராணுவத்தில் இணைந்த லுஸ் லாங்க் 2-வது உலகப்போரின் போது தனது 30-வயதிலேயே கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com