ஓய்வு முடிவை மாற்றியது ஏன்..? வினேஷ் போகத் உருக்கமான பதிவு

வினேஷ் போகத் ஓய்வு முடிவில் இருந்து விடுபட்டு 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளார்.
image courtesy: AP/PTI
image courtesy: AP/PTI
Published on

புதுடெல்லி,

இந்திய முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கடந்த ஆண்டு பாரீசில் நடந்த ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டி வரை முன்னேறி வியக்க வைத்தார். தங்கப்பதக்கத்துக்கான இறுதி சுற்றில் அமெரிக்காவின் சாரா ஹில்பிரான்டுடன் மோத இருந்தார்.

ஆனால் போட்டிக்குரிய நாளில் காலையில் அவரது உடல்எடையை பரிசோதித்த போது நிர்ணயிக்கப்பட்ட அளவான 50 கிலோவை விட கூடுதலாக 100 கிராம் அதிகமாக இருந்தது தெரியவந்தது. உடனடியாக நிறைய பயிற்சியுடன் தலை முடியை கூட வெட்டி பார்த்தனர். ஆனால் எடையை குறைக்க முடியவில்லை. இதனால் அவர் போட்டியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார். பதக்கமேடையில் ஏறும் கனவில் இருந்த அவர் இந்த முடிவால் நொறுங்கிப் போனார்.

இறுதிப்போட்டிக்கு முன்பு வரை எனது உடல் எடை சரியாக இருந்தது. அதனால் தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்று விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை தீர்ப்பாயம் நிராகரித்து விட்டது. போட்டியில் இருந்து வெளியேறிய விரக்தியில் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்றார். சில மாதங்களில் அரசியலில் குதித்த அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். கடந்த ஜூலை மாதத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் 31 வயதான வினேஷ் போகத் ஓய்வு முடிவில் இருந்து விடுபட்டு 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஓய்விலிருந்து திரும்பியது குறித்து வினேஷ் போகத் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில், பாரீஸ் ஒலிம்பிக்தான் உங்களது கடைசி போட்டியா? என்று மக்கள் என்னிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அதற்கு நீண்ட காலமாக என்னிடம் பதில் இல்லை. ஏனெனில் கடினமான கட்டத்தில் இருந்து மீண்டு வருவதற்காக விளையாட்டில் இருந்தும், அழுத்தத்தில் இருந்தும், எதிர்பார்ப்புகளில் இருந்தும் மட்டுமல்ல, சொந்த லட்சியங்களில் இருந்து கூட விலகி இருக்க வேண்டி இருந்தது. சில ஆண்டுகளில் இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விடுகிறேன்.

எனது பயணத்தின் உச்சம், மனவேதனைகள், தியாகங்கள் மற்றும் உலகம் இதுவரை கண்டிராத என்னை பற்றிய பதிப்புகளை எல்லாம் புரிந்து கொள்வதற்கு நேரம் எடுத்துக் கொண்டேன். ஆனால் இவற்றில் ஒரு உண்மையை கண்டறிந்தேன். நான் இன்னும் இந்த விளையாட்டை நேசித்துக் கொண்டு இருக்கிறேன். தொடர்ந்து போட்டியில் பங்கேற்க விரும்புகிறேன். அத்துடன், சாதிக்க வேண்டும் என்ற நெருப்பு எனக்குள் இன்னும் எரிந்து கொண்டு இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டேன்.

ஒழுக்கம், பயிற்சி, போராட்டம் எனது ரத்தத்தில் ஊறிப்போனவை. நான் எவ்வளவு தூரம் விலகிச் சென்றாலும் என்னுள் ஒரு பகுதி மல்யுத்த களத்திலேயேத்தான் இருக்கிறது.

எனவே 2028-ம்ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கை நோக்கி அஞ்சாத இதயத்துடன், ஒரு போதும் தலைகுனியாத மனஉறுதியுடன் திரும்பி அடியெடுத்து வைக்கிறேன். இந்த முறை நான் தனியாக செல்லப்போவதில்லை. எனது மகன் எனது அணியில் இணைகிறான். ஒலிம்பிக்கை நோக்கி பயணிப்பதற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இந்த குட்டி சியர்லீடர் இருக்கிறான் என்று பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com