

பியாங்சாங்,
23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கிவிட்ட இந்த ஒலிம்பிக் திருவிழாவில் ஒரு பக்கம் வியப்புக்குரிய வகையில் வீரர், வீராங்கனைகள் தங்களது சாகசங்களை காண்பித்து மெய்சிலிர்க்க வைக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் ஊக்கமருந்து சர்ச்சைகளும் தலைவிரித்தாடுகின்றன. ஜப்பான் ஸ்பீடு ஸ்கேட்டிங் வீரர் 21 வயதான கெய் சாய்ட்டோ ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலமானதால் உடனடியாக தாயகம் அனுப்பப்பட்டார். அடுத்ததாக தனது மனைவியுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற ரஷியாவின் கர்லிங் பந்தய வீரர் அலெக்சாண்டர் ருஷில்னிட்ஸ்கி, மெல்டோனியம் என்ற ஊக்கமருந்தை உபயோகப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் மேலும் ஒரு வீரர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார். சுலோவேனியா அணியின் ஐஸ் ஆக்கி வீரர் ஜிகா ஜெக்லிக் ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பது உறுதியாகி இருப்பதால் உடனடியாக போட்டியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.