மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடமாட்டேன் - சர்ச்சையில் சிக்கிய பிரிஜ் பூஷன் பேட்டி

மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடமாட்டேன்என்று சர்ச்சையில் சிக்கிய பிரிஜ் பூஷன் கூறியுள்ளார்.
மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடமாட்டேன் - சர்ச்சையில் சிக்கிய பிரிஜ் பூஷன் பேட்டி
Published on

கோன்டா,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மல்யுத்த பிரபலங்கள் கிளப்பிய குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி விசாரித்து அறிக்கையை மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்து விட்டது. அறிக்கை விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

'இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் முன்னரே நடத்தப்பட்டு இருக்கும். ஆனால் சமீபத்தில் எழுந்த சர்ச்சைகளால் சற்று தாமதமாக இப்போது நடக்கிறது. தலைவராக நான் தலா 4 ஆண்டுகள் வீதம் 3 முறை இருந்து விட்டேன். தேசிய விளையாட்டு கொள்கை விதிமுறையை நான் பின்பற்றுகிறேன். இதன்படி இனி தலைவர் பதவிக்கு நான் போட்டியிட முடியாது. மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கு நான் போட்டியிடமாட்டேன் என்று சொன்னேனே தவிர, தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சொல்லவில்லை.

என் மீது குற்றச்சாட்டுகளை கூறிய மல்யுத்த வீராங்கனைகள் விசாரணையின் போது கூறிய விஷயங்களை கேட்டு எனக்கு சிரிப்பு தான் வந்தது. சாக்ஷி மாலிக்கிடம் நான் தவறாக நடந்திருந்தால் பிறகு ஏன் அவர் அவரது திருமணத்திற்கு என்னை அழைத்தார். எனது வீட்டிற்கு வந்து எனது மகன், மருமகளுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட மல்யுத்த நட்சத்திரங்கள் திடீரென பாலியல் குற்றச்சாட்டை கூறியது ஏன் என்பது புரியவில்லை' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com