உலக தடகள சாம்பியன்ஷிப்; 200 மீட்டர் ஓட்டத்தில் நோவா லைல்சுக்கு தொடர்ந்து 4-வது தங்கம்

கோப்புப்படம்
20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
டோக்கியோ,
20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. போட்டியின் 7-வது நாளான நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. பங்கேற்ற 8 வீரர்களில் மின்னல் வேகத்தில் இலக்கை எட்டிப்பிடித்த அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் (19.52 வினாடி) தொடர்ந்து 4-வது முறையாக தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.
100 மீட்டர் ஓட்டத்தில் 3-வது இடம் பெற்ற அவர் அதற்கு 200 மீட்டர் ஓட்டத்தில் பரிகாரம் தேடிக் கொண்டார். இதன் மூலம் உலக தடகளத்தின் 200 மீட்டர் ஓட்டத்தில் அதிக தங்கம் வென்றவரான ஜமைக்கா ஜாம்பவான் உசேன் போல்ட்டின் (4 தங்கம்) சாதனையை சமன் செய்தார்.
மற்றொரு அமெரிக்க வீரர் கென்னத் பெட்னாரெக்குக்கு (19.58 வினாடி) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஒலிம்பிக் சாம்பியனான போட்ஸ்வானா வீரர் லெட்சில் டெபோகோ 4-வது இடமே பெற்றார்.
இதன் மகளிர் பிரிவில் அமெரிக்காவின் மெலிசா ஜெபர்சன் உட்டன் 21.68 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஏற்கனவே 100 மீட்டர் ஓட்டத்தின் அதிவேகமங்கையாக ஜொலித்த மெலிசா, மேலும் ஒரு தங்கத்தை அறுவடை செய்துள்ளார். இங்கிலாந்தின் அமெ ஹன்ட் வெள்ளிப்பதக்கமும் (22.14 வினாடி), நடப்பு சாம்பியன் ஜமைக்காவின் ஷெரிகா ஜாக்சன் வெண்கலப்பதக்கமும் (22.18 வினாடி) கைப்பற்றினர்.
400 மீட்டர் தடை ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் அமெரிக்காவின் ராய் பெஞ்சமினும் (46.52 வினாடி), பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான நெதர்லாந்தின் பெம்கே போலும் (51.54 வினாடி) தங்கம் வென்றனர்.
மகளிருக்கான ஈட்டி எறிதலின் தகுதி சுற்றில் 36 வீராங்கனைகள் களம் கண்டனர். இதில் டாப்-12 இடங்களை பிடிப்பவர்கள் இறுதி சுற்றை எட்டுவார்கள். இந்திய வீராங்கனை அன்னு ராணி 55.18 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 29-வது இடத்துக்கு பின்தங்கி ஏமாற்றம் அளித்தார்.
ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தின் தகுதி சுற்றின் ஒரு பிரிவில் டாப்-8 இடத்தை பெற்றவர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், 9-வது இடத்தை பிடித்த இந்திய வீரர் குல்வீர் சிங் (13 நிமிடம் 42.34 வினாடி) மயிரிழையில் வாய்ப்பை நழுவ விட்டார்.






