

தோகா,
17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதி சுற்றில் களம் கண்ட இந்திய வீரர் எம்.ஸ்ரீசங்கர் அதிகபட்சமாக 7.62 மீட்டர் நீளம் தாண்டி ஏமாற்றம் அளித்தார். இறுதி சுற்றை எட்டுவதற்கு 8.15 மீட்டர் நீளம் தாண்ட வேண்டும் அல்லது டாப்-12 இடங்களில் ஒருவராக வர வேண்டும். ஆனால் ஸ்ரீசங்கர், பங்கேற்ற 27 பேரில் 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 20 வயதான ஸ்ரீசங்கர் தேசிய சாதனையாக முன்பு 8.20 மீட்டர் நீளம் தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
100 மீட்டர் ஓட்டத்துக்கான தகுதி சுற்றில் முன்னணி வீரர்கள் அனைவரும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர். இதில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மன் 9.98 வினாடிகளில் இலக்கை எட்டி தனது பிரிவில் முதலிடத்தை பிடித்தார். நடப்பு சாம்பியன் அமெரிக்காவின் ஜஸ்டின் கேத்லின், ஜமைக்காவின் யோகன் பிளேக், இங்கிலாந்தின் ஜார்னெல் ஹக்ஸ், தென்ஆப்பிரிக்காவின் அகானி சிம்பினி, பிரேசிலின் டி ஆலிவியரா ஆகியோரும் அரைஇறுதியை எட்டினர். 100 மீட்டர் ஓட்டத்தில் அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது.