உலக பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென் அரைஇறுதிக்கு முன்னேறி அசத்தல்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென் அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வெல்வா,

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-8, 21-7 என்ற நேர் செட்டில் மார்க் கால்ஜோவை (நெதர்லாந்து) பந்தாடி முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 21-15, 15-21, 22-20 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜாவ் ஜன் பெங்கை தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றிக்காக உத்தரகாண்டை சேர்ந்த 20 வயதான லக்ஷயா சென் 1 மணி 7 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.

இன்னொரு ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாய் 14-21, 12-21 என்ற நேர் செட்டில் லோ கியான் யேவிடம் (சிங்கப்பூர்) வீழ்ந்தார்.

அரைஇறுதியை எட்டியதன் மூலம் ஸ்ரீகாந்த், லக்ஷயா சென் இருவருக்கும் குறைந்தது வெண்கலப்பதக்கம் உறுதியாகியிருக்கிறது. உலக பேட்மிண்டன் வரலாற்றில் இந்திய வீரர்களில் பிரகாஷ் படுகோனே (1983-ம் ஆண்டில் வெண்கலம்), சாய் பிரனீத் (2019-ம் ஆண்டில் வெண்கலம்) ஆகியோர் மட்டுமே பதக்கம் வென்றிருந்தனர். அந்த வரிசையில் ஸ்ரீகாந்தும், லக்ஷயா சென்னும் இணைகிறார்கள். அதே சமயம் இந்திய வீராங்கனைகள் தரப்பில் ஏற்கனவே உலக போட்டியில் 8 பதக்கங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

தரவரிசையில் 14-வது இடம் வகிக்கும் ஸ்ரீகாந்த் அடுத்து சக நாட்டவரான 19-ம் நிலை வீரர் லக்ஷயா சென்னுடன் இன்று மோதுகிறார். இவர்கள் சர்வதேச போட்டியில் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும். எது எப்படியென்றாலும் உலக பேட்மிண்டனில் இந்திய வீரர் ஒருவர் முதல்முறையாக இறுதி சுற்றை எட்டுவது உறுதியாகி விட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com