உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைத்தார், அமித் பன்ஹால்

உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் அமித் பன்ஹால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைத்தார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைத்தார், அமித் பன்ஹால்
Published on

எகடெரின்பர்க்,

20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 52 கிலோ உடல் எடைப்பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அமித் பன்ஹால், சகென் பிபோஸ்சினோவுடன் (கஜகஸ்தான்) கோதாவில் குதித்தார்.

தலா 3 நிமிடம் வீதம் 3 ரவுண்ட் கொண்ட இந்த ஆட்டத்தில் முதல் ரவுண்டில் எச்சரிக்கையுடன் ஆடிய பன்ஹால், பெரும்பாலும் தடுப்பாட்ட யுக்தியை கையாண்டார். அடுத்த இரு ரவுண்டுகளில் இருவரும் ஆக்ரோஷமாக ஆடினர். எதிராளியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அடிக்கடி இடைவெளியை பின்பற்றிய பன்ஹால், ஏதுவான வாய்ப்பில் எதிராளியின் முகத்தில் சில குத்துகளையும் விட்டு மிரட்டினார்.

முடிவில் 5 நடுவர்களின் தீர்ப்பின் அடிப்படையில் அமித் பன்ஹால் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 45 ஆண்டு கால உலக குத்துச்சண்டை வரலாற்றில் இந்திய வீரர் ஒருவர் இறுதிசுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் அவருக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.

இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் பன்ஹால், ஒலிம்பிக் சாம்பியனான ஷகோபிடின் ஜோய்ரோவுடன் (உஸ்பெகிஸ்தான்) பலப்பரீட்சை நடத்துகிறார். அரியானாவைச் சேர்ந்த 23 வயதான பன்ஹால் கூறுகையில், உலக குத்துச்சண்டையில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது இந்திய குத்துச்சண்டையில் மிகப்பெரிய சாதனை. நிச்சயம் நான் தங்கப்பதக்கம் வெல்வேன். அதற்காக எல்லா முயற்சியையும் வெளிப்படுத்துவேன் என்றார்.

63 கிலோ உடல் எடைப்பிரிவில் நடந்த மற்றொரு அரைஇறுதியில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக், கியூபா வீரர் ஆன்டி கோம்ஸ் கிரசை எதிர்கொண்டார். இதில் மனிஷ் கவுசிக் ஆவேசமாக விளையாடிய போதிலும், சாதுர்யம் இல்லை. இவரது குத்துகளை, கோம்ஸ் லாவகமாக நகர்ந்தும், குனிந்தும் தவிர்த்து விட்டார். அதே சமயம் ஆன்டி கோம்ஸ் விட்ட சில குத்துகளில் மனிஷ் கவுசிக் திணறிப் போனார். முடிவில் மனிஷ் கவுசிக் 0-5 என்ற கணக்கில் தோற்று வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com