உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் அமித் பன்ஹாலுக்கு வெள்ளிப்பதக்கம்

உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் அமித் பன்ஹால் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் அமித் பன்ஹாலுக்கு வெள்ளிப்பதக்கம்
Published on

எகடெரின்பர்க்,

20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று 52 கிலோ உடல் எடைப்பிரிவில் நடந்த இறுதி சுற்றில் இந்திய வீரர் அமித் பன்ஹால், ஒலிம்பிக் சாம்பியனான ஷகோபிடின் ஜோய்ரேவுடன் (உஸ்பெகிஸ்தான்) மோதினார்.

முதல் வினாடியில் இருந்தே இருவரும் ஆக்ரோஷமாக விளையாடினர். தடுப்பாட்ட யுக்தியை மறந்து, இருவரும் சரமாரி குத்துகள் விட்டனர். ஆனால் அமித் பன்ஹால் விட்ட பல குத்துகள் எதிராளியின் உடலைத்தான் பதம் பார்த்தன. பன்ஹாலை விட ஷகோபிடின் உயரமாக இருந்ததால் அவரது குத்துகள் துல்லியமாக எதிராளியின் முகத்தில் விழவில்லை. அதே சமயம் ஷகோபிடின் சில குத்துகளை பன்ஹால் முகத்தில் தொடுத்து புள்ளிகளாக மாற்றினார்.

முடிவில் 5 நடுவர்களின் தீர்ப்பின் அடிப்படையில் ஷகோபிடின் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தோல்வி அடைந்தாலும் அமித் பன்ஹாலுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 23 வயதான பன்ஹால் அரியானாவைச் சேர்ந்தவர் ஆவார்.

45 ஆண்டு கால உலக குத்துச்சண்டை வரலாற்றில் இந்திய வீரரின் சிறந்த செயல்பாடு இது தான். இதற்கு முன்பு இந்தியாவுக்கு 5 வெண்கலப்பதக்கம் தான் கிடைத்துள்ளது.

இந்த தொடரில் அமித் பன்ஹாலுடன், மற்றொரு இந்திய வீரர் மனிஷ் கவுசிக் (63 கிலோ) வெண்கலப்பதக்கம் பெற்றார். உலக குத்துச்சண்டை தொடர் ஒன்றில் இந்தியா 2 பதக்கங்கள் வென்று இருப்பது இதுவே முதல் முறையாகும்.

நடப்பு தொடரில் பங்கேற்ற 78 நாடுகளில் 14 நாடுகள் பதக்கப்பட்டியலில் இடம் பிடித்தன.

தேசத்துக்கு அர்ப்பணிக்கிறேன் - அமித் பன்ஹால்

எனது குத்துகளில் வேகம் கொஞ்சம் குறைவாக இருந்ததாக நினைக்கிறேன். இதில் நான் கவனம் செலுத்த வேண்டும். ஷகோபிடின் இந்த எடைப்பிரிவில் என்னை விட நீண்ட காலமாக விளையாடி வருகிறார். இந்த அனுபவம் அவருக்கு உதவிகரமாக இருந்தது. அடுத்த முறை அவரை சந்திக்கும் போது நிச்சயம் வீழ்த்துவேன். எனது வாழ்க்கையில் மிகப்பெரிய பதக்கம் இதுவாகும். இந்த பதக்கத்தை எனது தேசத்துக்கு அர்ப்பணிக்கிறேன்


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com