

புதுடெல்லி,
உலக சாம்பியன்ஷிப் குத்து சண்டை போட்டிகள் போலந்து நாட்டில் நடந்து வருகின்றன. இதில், மகளிருக்கான 48 கிலோ எடை பிரிவில் இன்றைய ஆட்டமொன்றில் இந்திய வீராங்கனை கீத்திகா நார்வால் தங்க பதக்கம் வென்றுள்ளார். அவர், போட்டியை நடத்தும் போலந்து நாட்டின் நடாலியா டாமினிகாவை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.
இதேபோன்று 51 கிலோ எடை பிரிவில், இந்தியாவின் பேபிரோஜிசனா சானு ரஷ்யாவின் வாலேரியா லின்கோவாவை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்தியாவுக்கான 2வது தங்க பதக்கத்திற்கு வழியேற்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் வீராங்கனைகளான பூனம் (57 கிலோ), வின்கா (60 கிலோ), அருந்ததி சவுத்ரி (69 கிலோ), சனம்சா சானு (75 கிலோ) மற்றும் ஆல்பியா பதான் (81 கிலோ) ஆகிய 5 பேரும் இறுதி போட்டியில் விளையாட உள்ளனர். இதனால் அவர்கள் தங்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.