

மாட்ரிட்,
உலகக் கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 4) ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்து வருகிறது. இதில் மகளிர் காம்பவுண்ட் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி, சீனதைபேவை எதிர்கொண்டது. ஜோதி சுரேகா, பர்னீத் கவுர், பிரித்திகா அடங்கிய இந்திய அணி 3-வது ரவுண்டில் 170-169 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
ஆனால் பதற்றத்தால் இறுதி கட்டத்தில் செய்த தவறால் இந்திய அணி 225-227 என்ற கணக்கில் சீனதைபேயிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதானது. மகளிர் தனிநபர் காம்பவுண்ட் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி 147-148 என்ற கணக்கில் இங்கிலாந்தின் எல்லா கிப்சனிடம் போராடி பணிந்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினார்.
இதன் கலப்பு அணிகள் பிரிவு வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் ஜோதி- ரிஷப் யாதவ் ஜோடி 156-153 என்ற கணக்கில் எல் சால்வடோரின் பாவ்லா கொராடோ- டக்ளஸ் விளாடிமிர் இணையை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றது.