உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்

இந்தியா கடந்த ஆண்டுகளில், நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இல்லாத அளவில் 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்தை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்
Published on

ரியோடி ஜெனீரோ,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனீரோவில் நடந்து முடிந்தது. இதில் ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்கிய போட்டிகளில், இந்தியாவின் இளவேனில் வாலறிவன், யாஷ்அஸ்வினி சிங் தேஸ்வால், அபூர்வி சண்டிலா, அஞ்சும் மவுட்கில், அபிஷேக் வர்மா, சஞ்சீவ் ராஜ்புத், சயுரப் சவுத்ரி, திவ்யான்ஷ் சிங் பன்வார், தீபக் குமார், ரஹி சர்னோபத் மற்றும் மனு பேக்கர் உள்பட 109 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில், ஆகஸ்ட் 28-ம் தேதி நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் இறுதி சுற்றில் இந்திய இளம் புயல் இளவேனில் குறிதவறாமல் சுட்டு மொத்தம் 251.7 புள்ளிகள் குவித்து, துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்கவேட்டையை தங்கப்பதக்கத்துடன் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, ஆகஸ்ட் 29-ம் தேதி நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவின் தகுதி சுற்றில், முன்னிலையை தக்க வைத்து கொண்ட அபிஷேக் வர்மா 244.2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார்.

மேலும், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை 22 வயதான முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான யாஷ்அஸ்வினி சிங் தேஸ்வால் பெற்று, இந்தியாவுக்கான 9-வது ஒலிம்பிக் ஒதுக்கீட்டை பெற்றார்.

டோக்கியோவில் நடைபெற உள்ள 2020 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள யாஷ்அஸ்வினி உட்பட சஞ்சீவ் ராஜ்புத், அஞ்சும் மவுட்கில், அபூர்வி சண்டிலா, சயுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, திவ்யான்ஷ் சிங் பன்வார், ரஹி சர்னோபத் மற்றும் மனு பேக்கர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

இதையடுத்து, செப்டெம்பர் 1-ம் தேதி நடந்த, 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் அபூர்வி சண்டிலா (ராஜஸ்தான்), தீபக் குமார் (டெல்லி) இணை தங்கம் வென்றனர். மேலும், அஞ்சும் மவுட்கில் (சண்டிகர்), திவ்யான்ஷ் சிங் (ராஜஸ்தான்) இணை வெண்கலம் வென்றனர்.

இதைதொடர்ந்து, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் மனு பேக்கர் மற்றும் சயுரப் சவுத்ரி இணை, யாஷ்அஸ்வினி மற்றும் அபிஷேக் வர்மா இணையை வீழ்த்தி தங்கத்தை வென்றனர். மேலும் யாஷ்அஸ்வினி மற்றும் அபிஷேக் வர்மா இணை போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளியை வென்றனர்.

மேலும், 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் அஞ்சும் மவுட்கில் மற்றும் திவ்யான்ஷ் சிங் இணை வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர்.

இதையடுத்து, இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடந்த காலங்களில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இல்லாத அளவில் இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com