உலக பாரா தடகள போட்டி: டெல்லியில் இன்று தொடக்கம்

இதில் இந்தியா உள்பட 104 நாடுகள் பங்கேற்கின்றன.
புதுடெல்லி,
மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி 1994-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 12-வது உலக பாரா தடகள போட்டி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் 5-ந்தேதி வரை நடக்கிறது. கவுரவமிக்க இந்த போட்டி இந்தியாவில் அரங்கேறுவது இதுவே முதல்முறையாகும்.
உடலில் உள்ள பாதிப்பு மற்றும் வளர்ச்சி மற்றும் பார்வை குறைபாடுகளுக்கு ஏற்ப வகைப்படுத்தப்படும் இந்த பந்தயத்தில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின், பிரேசில், இங்கிலாந்து, இலங்கை உள்பட 104 நாடுகளைச் சேர்ந்த 1,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். ஆண்கள் பிரிவில் 101, பெண்கள் பரிவில் 84, கலப்பு பிரிவில் ஒன்று என மொத்தம் 186 தங்கப்பதக்கத்துக்கு போட்டிகள் நடத்தப்படுகிறது. முந்தைய சீசனை விட 15 தங்கம் அதிகமாக வழங்கப்படுகிறது.
இந்திய தரப்பில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 74 வீரர், வீராங்கனைகள் களம் இறக்கப்படுகிறார்கள். இதில் உலக சாதனையாளரும் பாராஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் சுமித் அன்டில் (எப்.64 பிரிவு), உயரம் தாண்டுதல் வீரர் (டி64 பிரிவு) பிரவீன்குமார், நடப்பு சாம்பியன்களான தீப்தி ஜீவான்ஜி (பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம்), எக்தா பயான் (உருளை தடி எறிதல்), சிம்ரன் ஷர்மா (டி12 பிரிவில் 200 மீட்டர் ஓட்டம்), சச்சின் கிலாரி (ஆண்களுக்கான குண்டு எறிதல்) மற்றும் பிரீத்தி பால் (டி35 பிரிவு 100 மீ மற்றும் 200 மீட்டர் ஓட்டம்), எப்.41 பிரிவு ஈட்டி எறிதல் வீரர் நவ்தீப்சிங், உருளை தடி வீரர் தரம்பிர் உள்ளிட்ட இந்தியர்கள் பதக்கம் வெல்வதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.
பாராஒலிம்பிக்கில் 3 பதக்கம் வென்றவரும், உலக சாம்பியனுமான தமிழக உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் (டி42 பிரிவு) இந்த முறை பங்கேற்கவில்லை.






