உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன்; இந்திய இணைக்கு வெண்கல பதக்கம்

2018-ம் ஆண்டில் நடந்த பெண்கள் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தங்க பதக்கம் வென்றார்.
ஹாங்சவ்,
சீனாவின் ஹாங்சவ் நகரில் நடந்த உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவை சேர்ந்த சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை விளையாடினர்.
இதில், சீன வீரர்களான லியாங் வெய் கெங் மற்றும் வாங் சாங் இணை 21-10, 17-21, 15-21 என்ற புள்ளி கணக்கில் இந்திய இணையை வெற்றி கொண்டனர். இந்த ஆண்டின் கடைசி பேட்மிண்டன் தொடரான இதில், முதல் செட்டை எளிதில் இந்திய இணை வசப்படுத்தியது.
எனினும், அடுத்த செட்டில் உஷாராக விளையாடிய சீன இணை வெற்றி பெற்று, அடுத்த செட்டை நோக்கி போட்டியை நகர்த்தியது. இந்நிலையில், 3-வது செட்டிலும் திறமையாக விளையாடி அதனை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனால், இந்தியா வெண்கல பதக்கத்துடன் திருப்தியடைய வேண்டிய நிலை ஏற்பட்டது.
உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி தொடரில் இந்திய வீரர்கள் வென்ற 2-வது பதக்கம் ஆகும். இதற்கு முன் 2018-ம் ஆண்டில் நடந்த பெண்கள் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தங்க பதக்கம் வென்றார். உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி தொடரில் தங்கம் வென்ற நாட்டின் ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமையை சிந்து பெற்றுள்ளார்.






