உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்; வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு


உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்; வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு
x

கோப்புப்படம் 

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

போர்டு,

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நார்வேயில் உள்ள போர்டு நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு ‘ஸ்னாட்ச்’ முறையில் 84 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 115 கிலோவும் என மொத்தம் 199 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 3 வாய்ப்பிலும் அசத்திய மீராபாய் ‘ஸ்னாட்ச்’ முறையில் 87 கிலோ எடையை தூக்க முடியாமல் 2 முறை தடுமாறினார். அதனை தூக்கி இருந்தால் அவர் மொத்தத்தில் 200 கிலோ எடை இலக்கை கடந்து இருப்பார்.

வடகொரியா வீராங்கனை ரி சாங் கம் ‘ஸ்னாட்ச்’ முறையில் 91 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 122 கிலோவும் என மொத்தம் 213 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார். அத்துடன் அவர் ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ மற்றும் மொத்த எடைப்பிரிவில் உலக சாதனை படைத்தார். தாய்லாந்தின் தான்யத்தோன் சுக்சரோயன் வெண்கலப்பதக்கம் (198 கிலோ) பெற்றார்.

மணிப்பூரை சேர்ந்த 31 வயதான மீராபாய் சானு உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும். 2017-ம் ஆண்டு தங்கப்பதக்கத்தையும், 2022-ம் ஆண்டு (49 கிலோ பிரிவு) வெள்ளிப்பதக்கத்தையும் வென்று இருந்தார்.

மீராபாய் சானு கூறுகையில், ‘உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இது வரும் ஆண்டுகளுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். அடுத்து வரும் ஒவ்வொரு போட்டியும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கான எனது தயார்படுத்துதலின் ஒரு பகுதியாகும். அடுத்த ஆண்டு வரும் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள் அந்த பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும். நான் கடினமாக உழைப்பதிலும், ஒவ்வொரு போட்டியில் இருந்து கற்றுக்கொள்வதிலும், நாட்டுக்காக எனது சிறந்த திறனை வெளிப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறேன்’ என்றார்.

1 More update

Next Story