மழை பெய்யாமல் இருந்திருந்தால் 1.90 மீட்டர் உயரம் தாண்டியிருப்பேன் - மாரியப்பன்

எனது இலக்கு இந்த பாராஒலிம்பிக்கில் நிறைவேறவில்லை. அடுத்த முறை வரலாறு படைக்க முயற்சிபேன் என்று தமிழக வீரர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
மழை பெய்யாமல் இருந்திருந்தால் 1.90 மீட்டர் உயரம் தாண்டியிருப்பேன் - மாரியப்பன்
Published on

டோக்கியோ,

டோக்கியோ பாராஒலிம்பிக்கில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் பின்னர் அளித்த பேட்டி வருமாறு:-

போட்டி தொடங்கிய போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எனக்கு பிரச்சினையாக தெரியவில்லை. ஆனால் 1.80 மீட்டர் உயரம் தாண்டிய பிறகு மழை அதிகமானது. சீதோஷ்ண நிலை கடினமாகியது. (ஊனமான) காலில் அணிந்திருந்த சாக்ஸ் ஈரமானதால் ஓடி சென்று அதிக உயரம் தாண்டுவதில் சிரமம் உண்டானது. சீதோஷ்ண நிலை மட்டும் சிறப்பாக இருந்திருந்தால் நான் நிச்சயம் 1.90 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றிருப்பேன். எனது லட்சியம் மழையால் பாழாகி விட்டது.

உலக சாதனையோடு (1.96 மீட்டர் உயரம்) தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எனது இலக்கு இந்த பாராஒலிம்பிக்கில் நிறைவேறவில்லை. அடுத்த முறை வரலாறு படைக்க முயற்சிபேன்.

கொரோனா தொற்றுக்குள்ளாகியவரிடம் நெருக்கமாக இருந்ததாக என்னை தனிமைப்படுத்தியதால் தொடக்க விழாவில் இந்திய அணிக்கு தேசிய கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பை இழந்தேன். இதனால் மிகுந்த வேதனை அடைந்தேன். அது மட்டுமின்றி தனிமைப்படுத்தும் விதிப்படி தனியாகவே பயிற்சியில் ஈடுபட வேண்டி இருந்தது. ஆனாலும் தேசத்துக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாகி இருந்தேன். அதை செய்து காட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மாரியப்பன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com