'அரசியல் செய்ய விரும்பும் மல்யுத்த வீரர்கள் அரசியல் செய்யட்டும்' - மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் ஆதரவாளரான சஞ்சய் சிங் வெற்றி பெற்றார்.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பா.ஜ.க. எம்.பியான பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஜனவரி மாதத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவின் பேரில் பிரிஜ் பூஷன் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் நிர்வாகத்தை இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால கமிட்டி கவனித்தது. இதற்கிடையே தேர்தலை குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தவில்லை என்று சர்வதேச மல்யுத்த சம்மேளனத்தால், இந்திய மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் செய்யப்பட்டது.

கோர்ட்டு வழக்கு காரணமாக பலமுறை தள்ளிபோடப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரிஜ் பூஷன் ஆதரவாளரும், உத்தரபிரதேச மல்யுத்த சங்க துணைத் தலைவருமான சஞ்சய் சிங் 40 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று புதிய தலைவரானார். அவரை எதிர்த்து நின்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முன்னாள் வீராங்கனையான அரியானாவை சேர்ந்த அனிதா ஷிரான் 7 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.

மொத்தம் 15 பதவிகளில் 13 பதவிகளை பிரிஜ் பூஷன் ஆதரவாளர்கள் ஆக்கிரமித்தனர். துணைத் தலைவர் பதவிகளை ஜெய்பிரகாஷ் (டெல்லி, 37 வாக்குகள்), அசித் குமார் சாஹா (மேற்கு வங்காளம், 42), கர்தார் சிங் (பஞ்சாப், 44), போனி (மணிப்பூர், 38) ஆகியோரும், பொருளாளர் பதவியை உத்தரகாண்டை சேர்ந்த சத்யபால் சிங் தேஷ்வாலும் கைப்பற்றினர். 5 செயற்குழு உறுப்பினர் பதவிகளையும் அந்த அணியினரே வசப்படுத்தினர்.

2 பதவிகளை மட்டுமே எதிர்தரப்பினரால் பிடிக்க முடிந்தது. பொதுச்செயலாளர் பதவிக்கான போட்டியில் ரெயில்வே விளையாட்டு போர்டு முன்னாள் செயலாளர் பிரேம் சந்த் லோசாப் 27-19 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் துணைத்தலைவரான தர்ஷன் லாலை தோற்கடித்தார். சீனியர் துணைத்தலைவர் பதவிக்கான போட்டியில் அசாமை சேர்ந்த தேவேந்திர சிங் காடியன் 32-15 என்ற கணக்கில் ஐ.டி.நானாவதியை (குஜராத்) வீழ்த்தினார்.

புதிய தலைவராக தேர்வாகி இருக்கும் சஞ்சய் சிங் கூறுகையில், 'மல்யுத்த பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். அரசியல் செய்ய விரும்பும் மல்யுத்த வீரர்கள் அரசியல் செய்யட்டும். மல்யுத்தத்தை விரும்புபவர்கள் தொடர்ந்து மல்யுத்த பயிற்சியில் ஈடுபடட்டும். எங்களது வெற்றி, கடந்த 7-8 மாதங்களாக பாதிப்புக்கு ஆளான ஆயிரக்கணக்கான மல்யுத்த வீரர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்' என்றார்.

இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் கருத்து தெரிவிக்கையில், 'இந்திய மல்யுத்த சம்மேளனம் எல்லா வீரர்களுக்கும் முழு ஆதரவு அளிக்கும். பாரபட்சம் எதுவும் காட்டாது. போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இருக்காது' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com