சென்னை,
சென்னை ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. போட்டியை திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனர் ஜி.தர்மராஜன் தொடங்கி வைத்தார். சென்னை ஆக்கி சங்க செயலாளர் எம்.எஸ்.உதயகுமார், லீக் சேர்மன் லட்சுமி நாராயணன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். தொடக்க விழாவை தொடர்ந்து நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ்-இந்தியன் வங்கி அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு போலீஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கியை தோற்கடித்தது. போலீஸ் அணியில் ராஜேஷ், மரிய ஸ்டாலின், ரகு தலா ஒரு கோல் அடித்தனர். முன்னதாக நடந்த ஆட்டத்தில் சாய் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஏ.பி.எம். இன்போடெக் அணியை வீழ்த்தியது. சாய் அணியில் யோகேஸ்வரன், லோகேஷ் தலா ஒரு கோல் அடித்தனர். இன்று நடைபெறும் ஆட்டங்களில் சென்னை துறைமுகம்-ஸ்டேட் வங்கி (பிற்பகல் 2 மணி), வருமான வரி-சென்னை போலீஸ் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.