டென்னிஸ் வீரர் பெடரர் உருவம் பொறித்த வெள்ளி நாணயம்: சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டது

டென்னிஸ் வீரர் பெடரர் உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டுள்ளது.
Published on

ஷூரிச்,

உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரை கவுரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த 20 பிராங்க் வெள்ளி நாணயத்தை (இந்திய மதிப்பில் 1,500 ரூபாய்) சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டுள்ளது.

அந்த நாட்டின் நாணய அச்சுக்கூடம் இந்த நாணயத்தை தயாரித்து உள்ளது. தலையில் பட்டை அணிந்த நிலையில் பேக்ஹேண்ட் ஷாட் ஆடுவது போன்ற பெடரரின் உருவம் அச்சிடப்பட்டு இருக்கிறது. மொத்தம் 55 ஆயிரம் நாணயங்கள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நாணய விற்பனைக்கான முன்பதிவு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. முன்பதிவு செய்தவர்களுக்கு ஜனவரி 23-ந் தேதி முதல் இந்த நாணயம் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தை வாங்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதிக வெற்றிகளை குவித்த சுவிட்சர்லாந்து விளையாட்டு வீரர் மட்டுமின்றி நாட்டின் சரியான தூதுவராகவும் பெடரர் விளங்குகிறார்.

அவரை போன்ற பிரபலமான வீரர் வேறு யாரும் கிடையாது. களத்துக்கு வெளியேயும் அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். எனவே அவருக்கு இந்த கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது என்று சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது. நம்ப முடியாத கவுரவத்தை தனக்கு அளித்த சுவிட்சர்லாந்து அரசுக்கு நன்றி என்று தனது டுவிட்டர் பதிவில் பெடரர் குறிப்பிட்டுள்ளார்.

உயிருடன் இருக்கும் ஒருவருக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் நாணயம் வெளியிடப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும். பெடரர் உருவப்படத்துடன் வேறொரு வடிவில் 50 பிராங்க் தங்க நாணயம் அடுத்த ஆண்டு (2020) மே மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com