

பாரிஸ்,
பிரெஞ்சு ஓபன் தொடரின் இறுதிப்போட்டியில், ஆண்ட்ரீவா மற்றும் சவாலின்ஸ்கா ஆகியோர் நாளை கோப்பைக்காக மோத உள்ளனர். கிராண்ட் ஸ்லாம் வரலாற்றிலேயே மிகவும் எதிர்பாராத இறுதிப்போட்டிகளில் ஒன்றாக இந்தப் போட்டி பார்க்கப்படுகிறது. ஒரு புறம் இளம் நட்சத்திரமான ஆண்ட்ரீவா, மறுபுறம் தகுதிச்சுற்றில் இருந்து வந்து வரலாறு படைத்துள்ள சவாலின்ஸ்கா என ரசிகர்களின் கவனம் முழுவதும் இந்த போட்டியின் மீது திரும்பியுள்ளது.
19 வயதான 8-வது தரவரிசை வீராங்கனையான ஆண்ட்ரீவா, தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். மேலும், மரியா ஷரபோவா 2014-ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்ற பிறகு, ரோலண்ட் கரோஸில் கோப்பையை கைப்பற்றும் முதல் ரஷ்ய வீராங்கனை என்ற பெருமையையும் பெறலாம்.
மறுபுறம், உலக தரவரிசையில் 113-வது இடத்தில் இருந்து போட்டியை தொடங்கிய மயா சவாலின்ஸ்கா, தகுதிச்சுற்றில் இருந்து வந்து பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வெல்லும் முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இந்த இறுதிப்போட்டியில் யார் வென்றாலும் புதிய வரலாறு உருவாகப் போகிறது. ஆண்ட்ரீவா தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லப் போகிறாரா? அல்லது தகுதிச்சுற்றில் இருந்து வந்து சாம்பியன் பட்டம் வென்று சவாலின்ஸ்கா டென்னிஸ் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்க போகிறாரா? என்ற கேள்விக்கான பதில் நாளை தெரியவரும்.