

சிட்னி,
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் இந்த மாதம் 17 ஆம் தேதி தொடங்குகிறது. உலகின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் பங்கேற்கும் இந்த தொடரின் இறுதி போட்டி ஜனவரி 30 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடருக்கு முன், புதிதாக அறிமுகமாகியுள்ள ஏடிபி டென்னிஸ் குழு தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் தங்கள் நாட்டின் மற்ற வீரர்களுடன் குழுவாக இணைந்து விளையாடி வருகின்றனர்.
இந்த தொடரில் இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பிரான்சின் உகோ ஹம்பர்ட்டிற்கு எதிராக ரஸ்சியாவின் முன்னணி டென்னிஸ் வீரர் டேனியல் மெட்விடேவ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். உலகின் இரண்டாம் நிலை வீரரான மெட்விடேவ் தரவரிசையில் 35 வது இடத்தில உள்ள உகோ ஹம்பர்ட்டால் வீழ்த்தப்பட்டார்.
இந்த போட்டியில் முதல் சேட்டை 6-7 என்ற கணக்கில் இழந்த உகோ ஹம்பர்ட் பின்னர் அதிரடியாக விளையாடி 7-5, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.