

மெல்போர்ன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 2-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப்பை எதிர் கொண்டார்.
இதில் செரீனா வில்லியம்ஸ் இரண்டு செட்களையும் 6-3, 6-3 என எளிதாக கைப்பற்றி ஹாலெப்பை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். செரீனாவுக்கு இது 9-வது அரையிறுதியாகும். ஒட்டுமொத்தமாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 40-வது அரையிறுதியாகும். கிராண்ட் ஸ்லாமில் அவரது இந்த 362 வது வெற்றியின் மூலம், அவர் ரோஜர் பெடரரின் அதிக வெற்றிகளை சமன் செய்தார். மார்ட்டினா நவரதிலோவா 306 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்,
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, தைவான் வீராங்கனை சியேஹ் சு-வெய்யை எதிர்கொண்டார். இதில் நவோமி ஒசாகா 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன்படி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் மற்றும் நவோமி ஒசாகா ஆகியோர் மோத உள்ளனர்.