ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர் கால்இறுதிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், பெடரர் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர் கால்இறுதிக்கு தகுதி
Published on

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ள இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் நேற்று 4-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் டியாகோ ஸ்வாட்ஸ்மனை (அர்ஜென்டினா) வெளியேற்றி 11-வது முறையாக கால்இறுதியை எட்டினார்.

6 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 67-ம் நிலை வீரர் மார்டோன் புக்சோவிக்சுடன் (ஹங்கேரி) மோதினார். இதில் முதல் செட்டை கோட்டைவிட்ட பெடரர் அடுத்த செட்டுகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி, எதிராளியை அடக்கினார். 4-6, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்த பெடரர் 15-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் கால்இறுதிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபனில் அதிக முறை கால்இறுதியை எட்டிய வீரர் என்ற பெருமையும் பெடரருக்கு கிடைத்தது.

அமெரிக்காவின் டெனிஸ் சான்ட்கிரின் தன்னை எதிர்த்த பாபியோ போக்னினியை (இத்தாலி) 7-6 (7-5), 7-5, 6-7 (2-7), 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். மணிக்கு அதிகபட்சமாக 208 கிலோமீட்டர் வேகம் வரை சர்வீஸ் போட்ட சான்ட்கிரின், 21 ஏஸ் சர்வீஸ்களையும் வீசி மிரட்டினார். கனடாவின் மிலோஸ் ராவ்னிக் 6-4, 6-3, 7-5 என்ற நேர் செட்டில் மரின் சிலிச்சை (குரோஷியா) விரட்டினார். கால்இறுதி ஆட்டங்களில் சான்ட்கிரின் பெடரரையும், மிலோஸ் ராவ்னிக், ஜோகோவிச்சையும் சந்திக்க உள்ளனர்.

பெண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-3, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கேவை போராடி வீழ்த்தினார். கடந்த ஆண்டு விம்பிள்டன் 4-வது சுற்றில் இதே அலிசன் ரிஸ்கேவிடம் ஆஷ்லி தோற்று இருந்தார். அதற்கு இப்போது பழிதீர்த்துக் கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com