ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம், அலெக்சாண்டர் ஸ்வெரேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம்
Published on

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீரர் டொமினிக் திம் (ஆஸ்திரியா), தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) சந்தித்தார்.

இதில் முதல் செட்டை பறிகொடுத்த டொமினிக் திம் அதன் பிறகு எழுச்சி கண்டு டைபிரேக்கர் வரை போராடி ஸ்வெரேவின் சவாலுக்கு முடிவு கட்டினார். 3 மணி 42 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் டொமினிக் திம் 3-6, 6-4, 7-6 (7-3), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபனில் ஆஸ்திரியா நாட்டு வீரர் ஒருவர் இறுதிசுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் அவர் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச்சுடன் (செர்பியா) பலப்பரீட்சை நடத்துகிறார். இது குறித்து டொமினிக் திம் கூறுகையில், பிரெஞ்ச் ஓபனில் இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு வந்து, ரபெல் நடாலிடம் தோற்று இருக்கிறேன். இப்போது, ஜோகோவிச்சை சந்திக்க உள்ளேன். இவர், ஆஸ்திரேலிய ஓபனை 7 முறை வென்று ஆஸ்திரேலிய ஓபனின் ராஜாவாக திகழ்கிறார். அவருக்கு எதிராக எனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன் என்றார்.

பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் டிமா பாபோஸ் (ஹங்கேரி)- கிறிஸ்டினா மிலாடெனோவிச் (பிரான்ஸ்) ஜோடி 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் நம்பர் ஒன் ஜோடியான ஹிசை சூ வெய் (சீனதைபே)- பார்போரா ஸ்டிரிகோவா (செக்குடியரசு) இணையை துவம்சம் செய்து 2-வது முறையாக இந்த கோப்பைக்கு முத்தமிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com