இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபட விருதுகள் ஊக்குவிக்கும் : மனம் திறந்த டென்னிஸ் வீராங்கனை

2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் அங்கீதா ரெய்னா
இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபட விருதுகள் ஊக்குவிக்கும் : மனம் திறந்த டென்னிஸ் வீராங்கனை
Published on

டெல்லி

பத்மஸ்ரீ , பத்ம பூஷண் ,பத்ம விபூஷண்,அர்ஜுனா விருது ,மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா போன்ற விருதுகள் அதிகமான இளைஞர்களை விளையாட்டில் ஈடுபடவும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் ஊக்குவிக்கும் என்று அர்ஜுனா விருது பெற்ற இந்திய டென்னிஸ் வீராங்கனை அங்கீதா ரெய்னா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் இந்திய டென்னிஸ் வீராங்கனை அங்கீதா ரெய்னாவுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

28 வயதான அங்கீதா ரெய்னா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் முதல் முறையாக பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் முதல் 200 இடங்களுக்குள் நுழைந்தார். இதன் மூலம் முதல் 200 இடங்களுக்குள் நுழைந்த 5வது இந்திய டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் அங்கீதா.

2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும், 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் இவர் வென்றுள்ளார்.

விருது வென்ற பின் மனம் திறந்து பேசிய அங்கீதா ரெய்னா கூறியதாவது :

எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஜனாதிபதியிடமிருந்து நான் விருதைப் பெற்றபோது, நம் நாட்டில் மிகக் குறைவானவர்களே இத்தகைய அங்கீகாரத்தைப் பெறுகிறார்கள் என்பதை உணர்ந்தேன்.

பல வருட கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக இதை கருதுகிறேன்.எனக்கும் எனது பெற்றோருக்கும் இதுபோன்ற பெருமையான தருணங்களை உறுதி செய்யும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மதிப்புமிக்க விருதை வென்றது ஒரு பெரிய கவுரவம், அதிர்ஷ்டவசமாக நானும் விழாவில் கலந்து கொள்ள முடிந்தது.

இந்தியாவுக்காக அதிக விருதுகளை வெல்ல இது எனக்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கும். மேலும், இந்த விருது அதிகமான இளைஞர்களை விளையாட்டில் ஈடுபடவும், இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com