லண்டன் டென்னிசில் அல்காரஸ் 'சாம்பியன்' - மீண்டும் முதலிடத்தை பிடிக்கிறார்

லண்டனில் நடந்த குயின்ஸ் கிளப் டென்னிசின் இறுதி சுற்றில் 2-ம் நிலை வீரர் கார்லஸ் அல்காரஸ் மகுடம் சூடினார்.
Carlos Alcaraz (image courtesy: Cinch Championships twitter via ANI)
Carlos Alcaraz (image courtesy: Cinch Championships twitter via ANI)
Published on

பர்மிங்காம்,

விம்பிள்டன் டென்னிசுக்கு முன்னோட்டமாக பர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 7-6 (10-8), 6-4 என்ற நேர் செட்டில் கிரெஜ்சிகோவாவை (செக்குடியரசு) தோற்கடித்து பட்டத்தை தட்டிச் சென்றார். தரவரிசையில் 17-வது இடம் வகிக்கும் ஆஸ்டாபென்கோ இந்த சீசனில் வென்ற முதல் பட்டம் இதுவாகும். இந்த போட்டியில் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிப்பதாகவும், விம்பிள்டனுக்கு சிறந்த முறையில் தயாராகி இருப்பதாகவும் ஆஸ்டாபென்கோ உற்சாகமாக கூறினார்.

ஜெர்மனியின் பெர்லினில் நடந்து வந்த புல்தரை டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் செக்குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிடோவா 6-2, 7-6 (8-6) என்ற நேர் செட் கணக்கில் டோனா வெகிச்சை (குரோஷியா) வீழ்த்தி சாம்பியன் கோப்பையை தனதாக்கினார். அவர் வென்ற 31-வது சர்வதேச பட்டமாகும்.

லண்டனில் நடந்த குயின்ஸ் கிளப் டென்னிசின் இறுதி சுற்றில் 2-ம் நிலை வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-4, 6-4 என்ற நேர் செட்டில் அலெக்ஸ் டி மினாவை (ஆஸ்திரேலியா) வீழ்த்தி மகுடம் சூடினார். புல்தரை போட்டியில் அவரது முதல் பட்டமாக இது அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் 20 வயதான அல்காரஸ் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறுகிறார். இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளிவிட்டு 'நம்பர் ஒன்' ஆகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com