

சென்னை,
சென்னையில் நடைபெற்ற 2026-ம் ஆண்டுக்கான சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கார் - ருதுஜா போஸ்லே ஜோடி தோல்வியடைந்தது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், சுவிட்சர்லாந்தின் நைமா கரமோகோ - சிமோனா வால்டெர்ட் ஜோடியை இந்திய இணை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சுவிஸ் ஜோடி 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
தோல்வியடைந்த போதிலும், வைஷ்ணவி - ருதுஜா ஜோடி வரலாற்று சாதனை படைத்துள்ளது. டபிள்யூ.டி.ஏ. டூர் அளவிலான போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் முழு இந்திய ஜோடி என்ற பெருமையைப் பெற்றது.
இந்திய ஜோடி முதல் சுற்றில் இங்கிலாந்தின் மேட்லைன் புரூக்ஸ் - அமெலியா ராஜெக்கி ஜோடியை 6-4, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தியது.
காலிறுதியில் பிரிட்டனின் ஜோடி பரேஜ் - அமெரிக்காவின் ராபின் மாண்ட்கோமரியை 7-5, 6-4 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் 2-ம் நிலை ஜோடியான போலந்தின் வெரோனிகா பால்கோவ்ஸ்கா - அமெரிக்காவின் அலானா ஸ்மித் இணையை 6-2, 2-6, 10-8 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்தத் தொடரின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் 17 வயது வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி காலிறுதி வரை முன்னேறினார். இதன் மூலம் 2012-ம் ஆண்டுக்குப் பிறகு டபிள்யூ.டி.ஏ. டூர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். காலிறுதியில் அமெரிக்காவின் ராபின் மாண்ட்கோமரியிடம் 3-6, 3-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
இரட்டையர் பிரிவில் ஸ்ரீவள்ளி பாமிடிபாட்டியுடன் இணைந்து விளையாடிய மாயா, முதல் சுற்றில் செக் குடியரசின் அனெட்டா குச்மோவா - அனெட்டா லபுட்கோவா ஜோடியை வீழ்த்தினார். காலிறுதியில் நெதர்லாந்தின் இசபெல் ஹாவர்லாக் - ஹங்கேரியின் பன்னா உத்வார்டி ஜோடியிடம் 3-6, 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
இந்தியாவின் அங்கிதா ரைனா, ஜப்பானின் ஹிரோகோ குவாட்டாவுடன் இணைந்து மகளிர் இரட்டையர் பிரிவில் களமிறங்கினார். ஆனால் முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் கேப்ரியல்லா டா சில்வா பிக் - கஜகஸ்தானின் ஜிபெக் குலம்பாயேவா ஜோடியிடம் 1-6, 1-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.