டேவிஸ் கோப்பை டென்னிஸ்: யுகி பாம்ப்ரி, திவிஜ் சரண் விலகல்

செர்பியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து யுகி பாம்ப்ரி, திவிஜ் சரண் விலகியுள்ளனர்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: யுகி பாம்ப்ரி, திவிஜ் சரண் விலகல்
Published on

புதுடெல்லி,

டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இந்தியா-செர்பியா இடையிலான ஆட்டம் வருகிற 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை செர்பியாவின் கிரால்ஜிவோ நகரில் நடக்கிறது.

இந்த போட்டிக்கான அணியில் இருந்து இந்திய முன்னணி ஒற்றையர் பிரிவு வீரர் யுகி பாம்ப்ரி மற்றும் சமீபத்தில் ஆசிய விளையாட்டில் இரட்டையரில் தங்கம் வென்ற திவிஜ் சரண் ஆகியோர் விலகியுள்ளனர். திவிஜ் சரண் தோள்பட்டை காயத்தாலும், அமெரிக்க ஓபனில் முதல் சுற்றுடன் நடையை கட்டிய யுகி பாம்ப்ரி கால் முட்டி காயத்தாலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

சகெத் மைனெனி, முதலில் மாற்று வீரராக இடம் பெற்று இருந்தார். இப்போது அவர் பாம்ப்ரிக்கு பதிலாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதே போல் திவிஜ் சரண் இடத்தில் தமிழகத்தின் ஸ்ரீராம் பாலாஜி ஆட உள்ளார்.

ஆனால் மாற்று ஆட்டக்காரராக இடம் பெற 21 வயதான டெல்லியைச் சேர்ந்த சுமித் நாகல் மறுத்து விட்டார். இதையடுத்து புனேயைச் சேர்ந்த அர்ஜூன் காதே மாற்று வீரராக தேர்வாகி உள்ளார்.

இது குறித்து அகில இந்திய டென்னிஸ் சங்க செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜீயிடம் கேட்ட போது, நாங்கள் சுமித் நாகலை தொடர்பு கொண்டு, பாம்ப்ரிக்கு பதிலாக அணியில் இணையும்படி கேட்டுக் கொண்டோம். அதற்கு அவர், சேலஞ்சர்ஸ் கோப்பை போட்டிகளில் விளையாடப் போவதாக கூறி விட்டார். மேலும் அவர், ராம்குமார், பிரஜ்னேஷ் ஆகியோர் ஒற்றையர் ஆட்டங்களில் விளையாடுவார்கள். அதனால் நான் மாற்று வீரர் இடத்தில் தான் இருக்க வேண்டி இருக்கும். அதனால் தான் சேலஞ்சர்ஸ் போட்டியில் ஆட முடிவு செய்துள்ளேன். ஆனால் மிகவும் அவசியம் என்று கருதினால் அணியில் சேருகிறேன் என்றும் கூறினார். நிபந்தனைகளின் அடிப்படையில் எந்த வீரரையும் நாங்கள் தேர்வு செய்ய முடியாது. அதனால் இந்த போட்டிக்கு உங்களது பெயரை பரிசீலிக்க மாட்டோம் என்று அவரிடம் கூறி விட்டோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com