சட்ட போராட்டத்தில் தோல்வி; ஆஸி. ஓபனில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார் ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்று, சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் வாய்ப்பை ஜோகோவிச் இழந்துள்ளார்.
சட்ட போராட்டத்தில் தோல்வி; ஆஸி. ஓபனில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார் ஜோகோவிச்
Published on

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.

இந்தத் தொடரில் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் என்று புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், நடப்பு சாம்பியனான, நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (வயது 34), தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.

எனினும், இந்த போட்டியில் பங்கேற்க போட்டி அமைப்பு குழுவின் மருத்துவ கமிட்டியிடம் மருத்துவ விதிவிலக்கு பெற்று கடந்த 5-ந் தேதி மெல்போர்ன் சென்றார். ஆனால் அவர் எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தபட்டதுடன், அவரது விசாவும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் அவர் மெல்போர்னில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மெல்போர்னில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ஜோகோவிச் தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றார்.

ஆனால், ஆஸ்திரேலிய குடியுரிமை மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை நேற்று முன்தினம் மீண்டும் ரத்து செய்தார்.. இதனால் அவர் மறுபடியும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தன் மீதான இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜோகோவிச் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட், ஜோகோவிச்சின் கோரிக்கையை நிராகரித்தது. இதன் மூலம், ஜோகோவிச்சால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விசா ரத்து செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோகோவிச், ஆஸ்திரேலிய கோர்ட்டின் தீர்ப்பால் கடும் வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். எனினும், கோர்ட் உத்தரவை மதிப்பதாகவும், அதிகாரிகளுக்கு உரிய ஒத்துழைப்பு அளிப்பேன் எனவும் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com