

வாஷிங்டன்,
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நேரப்படி நேற்று காலை நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) சரிவை சமாளித்து 6-7 (6-8), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் 28-ம் நிலை வீரரான ஆர்தர் ரிண்டர்க்னெக்கை (பிரான்ஸ்) சாய்த்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்' வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-4, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அலெக்சாண்டர் கோவா செவிச்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் போட்டியில் ஜோகோவிச் 4-வது சுற்றை எட்டுவது கடந்த 9 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் 2-ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் மரியா சக்கா ரியை (கிரீஸ்) விரட்டியடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 6-4, 6-4 என்ற நேர செட்டில் கோஸ்ட்யுக்கை (உக்ரைன்) வெளியேற்றினார். இன்னொரு ஆட்டத்தில் மேடிசன் கீஸ் (அமெரிக்கா) 6-2, 2-6, 3-6 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் சோனய் கார்டலிடம் வீழ்ந்தார்.